வீரதீரச் செயலுக்கான குடியரசுத் தலைவரின் விருது பெற்ற ஒரு ஐபிஎஸ் அதிகாரி செய்திருக்கும் காரியம் ஒரு மாநிலத்தையே கலங்கடித்திருக்கிறது.
அசாம் மாநிலத்தில் உள்துறை செயலாளராக இருந்து வந்தவர் சிலாடித்யா செட்டியா (44). ஐபிஎஸ் அதிகாரி. இவரது மனைவி அகமோனி பார்பருவா (40). இருவரும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பத்து வருடத்துக்கு மேல் ஆகியும் இருவருக்கும் குழந்தை இல்லை.
அகமோனி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இடையில் சில காலம் அவர் சென்னையிலும் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
உயிர்க் கொல்லி நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் மனைவியை அருகிலிருந்து சிலாடித்யா அக்கறையுடன் கவனித்துக்கொண்டார்.
இந்நிலையில் அவருக்கு கேன்சர் முற்றிய நிலையில், கவுகாத்தியில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது வந்தது.
இந்த நிலையில், அகமோனி நேற்று மாலை 4.25 மணிக்கு சிகிச்சை பலனின்றி ஐசியூவில் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியின் மரணத்தை அறிந்த சிலாடித்யா மனம் உடைந்துள்ளார்.
“ஐ.சி.யு.வில் மனைவி உடல் அருகில் நின்று பிரார்த்தனை செய்ய எனக்கு அனுமதிக்க வேண்டும்” என்று சிலாடித்யா மருத்துவர்களிடம் கேட்டுள்ளார்.
அதற்கு மருத்துவர்களும் அனுமதி அளித்துள்ளனர். பிரார்த்தனை செய்வதற்காக சிலாடித்யா உள்ளே சென்ற சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது.
என்ன ஏதேன்று பதறியடித்துக் கொண்டு மருத்துவர்களும் செவிலியர்களும் சென்று பார்த்தபோது சிலாடித்யா, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
ரவுடிகளை ஒடுக்கி குற்றங்களைக் கட்டுப்படுத்தியதற்காக 2015ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் சிறந்த காவல் அதிகாரிகளுக்கான விருதை வென்ற சிலாடித்யா, மனைவி இறப்பின் துக்கம் தாங்காமல் ஐசியூவில் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.