“ஏங்கிட்ட கிணறு வெட்டுன ரசீது இருக்குடா… காணாம போன கிணற கண்டுபிடிக்காம விடமாட்டேன் டா…!”என உணர்ச்சிப் பொங்க வடிவேலு பேசும் வசனம் காமெடியாக இருந்தாலும், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தை வெட்ட வெளிச்சம் போட்டியது.
அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் சாதாரண மக்கள் படும்பாடு ஓய்ந்தபாடில்லை! மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வட்டாட்சியர் ஒருவர் கொடுத்த தவறான வருமான சான்றிதழ் காரணமாக மாணவர் ஒருவருக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை. இப்போது இந்த சம்பவம் வைரலாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பண்டா தெஹ்சில் கோக்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் திசு சாதர். இவரின் குடும்பத்திற்கு மொத்த ஆண்டு வருமானம் 2 ரூபாய் என கடந்த ஜனவரி மாதம் வருமான வருமான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களது குடும்பத்தில் மொத்தம் 5 பேர். வறுமையால் அனைவரும் கூலி வேலைக்கு செல்கிறார்கள். திசு சாதரின் இளைய மகன் பல்ராம் சாதர் தற்போது 12ஆ ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் உதவித்தொகை விண்ணப்பிப்பதற்காக வருமான சான்றிதழ் விண்ணப்பித்துப் பெற்றுள்ளார். இந்த வருமான சான்றிதழில்தான் திசு சாதர் குடும்பத்தின் ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய் என தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.
தனக்கு உதவித்தொகை கிடைக்காதது குறித்து ஆசிரியர்களிடம் பல்ராம் தகவல் தெரிவித்தபோது தான், இந்த 2 ரூபாய் தகவலே வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.
ஆனால், உண்மையில் பல்ராம் குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் 40 ஆயிரமாகும். பொதுசேவை மையம் மூலம் பெறப்பட்ட இந்த சான்றிதழ் வட்டாட்சியர்தான் சரி பார்த்துக் கொடுத்திருப்பார். இந்த தவறை அவர் கவனிக்காமலேயே கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளார்.
தற்போது தவறாக அச்சடிக்கப்பட்ட வருமான சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு மற்றொரு வருமான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அலட்சியமாக செயல்பட்ட வட்டாட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வடிவேலு மாதிரி அந்த மாணவரும் ”ஏங்கிட்ட சர்டிபிகேட் இருக்குடா… எனக்கு ஸ்காலர்ஷிப் கொடுங்கடாணு” கேட்டிருக்கலாம்!