என்.ஐ.ஏ. தேடுதல் : 10 மாநிலங்களில் 44 வெளிநாட்டவர் கைது!

 என்.ஐ.ஏ. சோதனை
என்.ஐ.ஏ. சோதனை
Published on

வெளிநாட்டினரை சட்டவிரோதமாகப் பணியமர்த்திய புகாரில் என்.ஐ.ஏ. தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் நேற்று தேடுதல் சோதனை நடத்தியது. இதில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கதேசம், மியான்மர் நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் ஏராளமானவர்கள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக அண்மைக் காலமாக பிரச்னை ஏற்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இவர்களுக்கு இந்தியக் குடிமக்களுக்கு உரிய ஆதார் அட்டையை போலியாகத் தயாரித்து வழங்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை -என்.ஐ.ஏ. அடிக்கடி விசாரணை, கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திரிபுரா, அசாம், மேற்குவங்கம், கர்நாடகம், தெலங்கானா, அரியானா, இராஜஸ்தானில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது. தமிழ்நாட்டிலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர் உட்பட பல மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சென்னை, பெங்களூரு, ஜெய்பூர், குவஹாத்தி ஆகிய 4 இடங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் தேடுதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பத்து மாநிலங்களில் மொத்தம் 55 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 44 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும், மின்னணு சாதனங்கள், செல்போன்கள், சிம் கார்டுகள், ரூ.20 இலட்சம் ரொக்கம், வெளிநாட்டுப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

logo
Andhimazhai
www.andhimazhai.com