56 ஆண்டுகள் கழித்து மீட்கப்பட்ட விமானப் படை வீரரின் உடல்! உறவினர்கள் உருக்கம்!

மல்கான் சிங் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் ராணுவத்தினர்
மல்கான் சிங் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் ராணுவத்தினர்
Published on

இமாச்சல பிரதேசத்தில் விமான விபத்தில் காணாமல் போனவர்களில் 5 பேரின் உடல் 56 ஆண்டுகள் கழித்து மீட்கப்பட்டுள்ளது. அவர்களது உடல் ராணுவ மரியாதையுடன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என். 12 ரக இரட்டை எஞ்சின் விமானம் 102 வீரர்களை ஏற்றிக்கொண்டு கடந்த 1968ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி சண்டிகரில் இருந்து காஷ்மீர் மாநிலம் லே பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள ரோஹ்தாங் கணவாய் பகுதியில் சென்ற போது திடீரென விபத்தில் சிக்கிய விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 102 பேரும் பலியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் பனிக்கட்டி படர்ந்த அந்த பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதால் இறந்தவர்களின் சடலங்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ஆனால் சடலங்களை மீட்க முடியவில்லை.

இதன் பின்னர் கடந்த 2003ஆம் ஆண்டு மலையேறும் நிபுணர்கள் விமானத்தின் சிதறிய பாகங்களை கண்டுபிடித்தனர். அதை தொடர்ந்து அந்த பகுதியில் சடலங்களை தேடும் பணி நடைபெற்றது. இதை அடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு அந்த பகுதியில் இருந்து 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

இதையடுத்து அவர்கள் யார் என்பது குறித்து அடையாளம் காணும் பணி நடந்தது. இதில் மல்கான் சிங் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மற்ற 3 பேரின் பேரின் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள ஒருவர் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

இதில் மல்கான் சிங்கின் உடல் அவரின் சொந்த ஊரான ஃபதேபூருக்கு கொண்டு சொல்லப்பட்டு, அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 2: 30 மணியளிவில் அவரின் இறுதிச்சடங்கு ராணுவ மரியாதையோடு நடைபெற்றுள்ளது.

மல்கான் சிங் யார்?

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரை அடுத்துள்ள ஃபதேபூரை சேர்ந்தவர் மல்கான் சிங். இவருக்கு சிறுவயதிலிருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்பது விருப்பமாக இருந்துள்ளது.

20 வயதில் இந்திய விமானப் படையில் வேலைக்கு சேர்ந்தவர் ஷீலா தேவி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பல கனவுகளுடன் பணியில் சேர்ந்த அவர் தன்னுடைய 23ஆவது வயதில் விமான விபத்தில் உயிரிழந்தார். அப்போது அவருக்கு 18 மாத கைக்குழந்தை இருந்தது.

மல்கான் சிங்கை கடைசியாக ஒருமுறை பார்க்கவோ, அவரது இறுதிச் சடங்குகளைச் செய்யவோ முடியவில்லையே என்ற வேதனையில் இருந்த அவரின் குடும்பத்தார், அவரின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கை செய்துள்ளனர். ஆனால், அவரின் மனைவியும் மகனும் இப்போது உயிருடன் இல்லை என்பதுதான் பெரும் சோகமான செய்தி!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com