ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்

இதெல்லாம் நாங்க சொன்னதுதான்… காங்கிரஸ்!

Published on

‘மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையைத்தான், தற்போது மத்திய பட்ஜெட் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்திருக்கிறார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்’ என்று முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் விமரிசித்துள்ளார்.

2024 - 25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

அதில், ’அடுத்த ஐந்தாண்டுகளில் 500 முன்னணி நிறுவனங்களில் 5 கோடி இளைஞர்களுக்கு மாதம் 5000 ரூபாய் கொடுப்பனவுடன் (Stipend) இன்டர்ன்ஷிப் வழங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்படும்' என்று அறிவித்தார்.

இந்த நிலையில், நிர்மலா சீதாராமன் அறிவித்த இந்த திட்டமானது காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த திட்டம் என்றும், மத்திய அரசு அதனைத் தனது பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை-2024 வரைவு குழு தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் படித்திருக்கிறார் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 30-ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகையை (Employment-linked incentive) அவர் கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி.

அதோடு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11-ல் குறிப்பிடப்பட்டுள்ள, ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் கொடுப்பனவுடன் கூடிய பயிற்சித் திட்டத்தை நிதியமைச்சர் அறிமுகப்படுத்தியதிலும் மகிழ்ச்சி. காங்கிரஸ் அறிக்கையிலுள்ள வேறு சில யோசனைகளையும் நிதியமைச்சர் எடுத்திருக்கிறாரா என்பதை அறிய விரும்புகிறேன். அதில் தவறவிட்ட வாய்ப்புகளையும் விரைவில் பட்டியலிடுகிறேன். மேலும், ஏஞ்சல் வரியை நிதியமைச்சர் ரத்து செய்ததிலும் மகிழ்ச்சி. இதைத்தான் காங்கிரஸ் பல ஆண்டுகளாகக் கோரி வந்தது. இதுவும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் 31ஆம் பக்கத்தில் இருக்கிறது." என்று பதிவிட்டிருக்கிறார்.

இதே குற்றச்சாட்டை ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷூம் முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com