அமெரிக்கக் கல்லூரிக்கே அல்வா கொடுத்த இந்திய மாணவன்! போலி சான்றிதழ்கள் மூலம் லட்சங்களில் உதவித்தொகை!

அமெரிக்க கல்லூரிக்கு அல்வா
அமெரிக்க கல்லூரிக்கு அல்வாImage by freepik
Published on

அந்த 19 வயதாகும் இந்தியச் சிறுவனை அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள லேஹை பல்கலைக்கழகத்தினர் ஜென்மத்துக்கும் மறக்கமாட்டார்கள். அப்படி என்ன செய்துவிட்டான் இவன்?

தன்னுடைய +2 மதிப்பெண் பட்டியலில் திருத்தம்செய்து விண்ணப்பித்து அப்பல்கலை.யில் இடம் வாங்கியதுடன், அப்பா இறந்துவிட்டார் என போலி சான்றிதழ் கொடுத்து, இரக்கம் வர வைத்து, முழு ஸ்காலர்ஷிப், இந்தியாவுக்கு வந்துபோக ஆண்டுக்கு ஒரு முறை டிக்கெட் செலவு என சலுகைகளும் பெற்று அந்தப் பல்கலை.யில் படிக்க சேர்ந்தேவிட்டான்.

அவனவன் அமெரிக்காவின் சிறந்த கல்லூரிகளில் இடம் வாங்க தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கையில், இந்தப் பையன் இப்படி ஒரு தில்லாலங்கடி வேலையைச் செய்துள்ளான்.

இந்த ஏமாற்று வேலை எப்படி வெளியே தெரியவந்தது என்பது பெரிய தமாஷ்.  தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல் இந்தக்கால 2கே கிட்ஸ்கள் தங்கள் சமூக ஊடகப் பதிவுகளால் சிக்குகிறார்கள்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரெட்டிட் சமூக ஊடக தளத்தில் ஒரு பதிவை அடையாளம் மறைத்த ஒருவர் இடுகிறார். அது ஒரு நீளமான பதிவு.

படிப்பின் மீதே ஆர்வம் இல்லாத நான் எப்படி ஏமாற்று வேலைகள் செய்து அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகத்தில் முழு ஸ்காலர்ஷிப்புடன் படித்துவருகிறேன் தெரியுமா என்பது அந்தப் பதிவின் சாரம். தான் எப்படியெல்லாம் ஏமாற்றி இந்த இடத்தைப் பிடித்தேன் என்று அந்தப் பதிவு  மேலும் விளக்கியது.

9 முதல் 11 வரையிலுமான தன் மதிப்பெண் பட்டியல்களை அவர் திருந்தி, அவற்றில் தன் பள்ளி பிரின்சிபாலின் போலி சீல் தயார் செய்து,அவற்றை ஒரிஜினல் போல் மாற்றியிருக்கிறார். தான் படித்த பள்ளியையும் மாநிலத்தையும் மாற்றி, போலியாக தன்னைப் பற்றிய புரொஃபலை உருவாக்கி, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தார். தன் பள்ளியின் பிரின்சிபாலுக்கென போலி இமெயில் ஐடியை உருவாக்கி, அமெரிக்காவிலிருந்து இந்தச் சான்றிதழ்களைச் சரிபார்க்க மின்னஞ்சல் வரும்போது, அதற்குப் பதிலளிக்கவும் செய்தார். போலி மதிப்பெண் பட்டியல், ஏஐ மூலம் உருவாக்கிய விண்ணப்பக் கட்டுரைகள் ஆகியவற்றைக் கொண்டு விண்ணப்பித்து காத்திருந்தார். இதில் லேஹை பல்கலைக்கழகம், பையன் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளானே என்று வாய்ப்பு அளித்தது. நல்ல ஸ்காலர்ஷிப்பும் கொடுப்பதாகச் சொல்லியது.

ஆனாலும் தன் ஒட்டு மொத்த செலவுக்கும் ஸ்காலர்ஷிப் வாங்க அந்தப் பையன் முடிவுசெய்தான். ’என் அப்பா கேன்சரால் இறந்துவிட்டார். எனவே, என்னால் செலவை ஈடுகட்ட முடியாது’ என்று சொல்லி மின்னஞ்சல் அனுப்பினான். பல்கலைக்கழக அதிகாரிகள் மேலும் இரக்கப்பட்டு, எல்லா செலவுக்கும் ஸ்காலர்ஷிப் தருவதாகவும் ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா வந்து செல்லும் டிக்கெட்டும் தருவதாகவும் ஒப்புக்கொண்டனர்.

எதிர்கால பில்கேட்ஸ், சுந்தர் பிச்சை என்று இவனை அவர்களில் யாரோ நினைத்திருக்கலாம்!

‘அதன் பிறகு, ‘12 ஆம் வகுப்பில் நான் வாங்கியதோ 58% தான். பாஸ் ஆவேனா என்றுகூட பயமாக இருந்தது. அந்த மார்க்‌ஷீட்டைப் பதிவிறக்கி, 91% ஆக மாற்றி வீட்டில் காண்பித்தேன். சந்தோஷப்பட்டார்கள். அதே சான்றிதழை நான் உருவாக்கிய பள்ளி இமெயில் மூலமாக அமெரிக்கப் பல்கலை.க்கு அனுப்பினேன். அவர்கள் அதிகாரபூர்வமாக எனக்கான அட்மிஷனை உறுதிசெய்தார்கள். விசா வாங்கும்போது மாட்டுவேன் என நினைத்தேன். ஆனால் முழு ஸ்காலர்ஷிப் என்றதும் கேள்வியே இல்லாமல் விசா கிடைத்தார்கள்!’ என்கிறது அந்தப் பதிவு.

அதற்குப் பிறகு அந்தப் பல்கலை.யில் சேர்ந்து படிக்க ஆரம்பித்த பையன், இந்த ஸ்காலர்ஷிப்பைத் தொடர்ந்து பெற வேண்டுமானால் நல்ல மதிப்பெண்களை அமெரிக்காவிலும் பெறவேண்டுமே.

‘கஷ்டப்பட்டு படித்துப் பார்த்தேன். முடியவில்லை. எனவே தேர்வு எழுதுகையில் நைசாக அறையைவிட்டு பேப்பருடன் வெளியே வந்து கணினியைப் பார்த்து விடைகளை எழுதி, தேர்வு முடிந்து எல்லோரும் எழுந்து பேப்பரைக் கொடுக்கையில் உள்ளே போய் கொடுத்துவிடும் டெக்னிக்கைக் கடைப்பிடித்தேன். (இம்புட்டு ஈஸியா?) கடந்த செமஸ்டரில் 4/4 ஜிபிஏ வாங்கிவிட்டேன்,’ என்று நீளும் அந்தப் பதிவில், ’இப்போதெல்லாம் எதையும் நேர்மையாகச் செய்யவே பிடிக்கவில்லை’ என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதைப் படித்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அதில் பரிதாபாத்தைச் சேர்ந்த 19 வயது பையன் ஒருவனும் அடக்கம். இந்தப் பையன் அவனுக்கு நேர் எதிர் குணம் கொண்டவன். ‘அவனவன் கஷ்டப்பட்டுப் படிக்கிறான். அட்மிஷன் கிடைக்கிறதே கஷ்டமாக இருக்கிறது. இந்தப் பையன் ஏமாற்றி அட்மிஷன் வாங்கிவிட்டு, அதை பீற்றிக்கொள்ளவும் செய்கிறானே’ என்று கடுப்பாகிவிட்டான். அந்த அடையாளம் மறைத்த ஐடி -ஐ ஆராய்ந்ததில், அதில் எந்த க்ளூவும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு பதிவில் ஒரு கட்டடம் இருந்தது. அந்தக் கட்டடத்தின் படத்தை கூகுளில் ஆராய்ந்தபோது அது லேஹை பல்கலைக்கழகம் எனத் தெரிந்தது. ரெட்டிட் சமூக வலைத்தளத்தில் அந்த லேஹை பல்கலைக்கழகப் பக்கத்தை இந்த ஐடி லைக் போட்டு வைத்து இருந்தது.

இந்தப் பையன் உடனே அந்தப் பல்கலை.க்கு விவரமாகக் கடிதம் எழுதினான். இந்திய மாணவன் ஒருவன், அப்பா கேன்சரில் இறந்தார் என சான்றிதழ் கொடுத்தவன், 12 ஆம் வகுப்பில் 91% எடுத்தவன், முழுமையான ஸ்காலர்ஷிப் பெற்றவன், பிரின்சிபாலின் போலி இமெயில் கொடுத்தவன்... இந்த  க்ளூக்களை வைத்து தேடுங்கள், ஆளைப் பிடிக்கலாம் என்று எழுதி இருந்தான்.

ஒரே மாதத்தில் அந்தப் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் இவனிடம் பேசினார். ‘அந்த மாணவனைப் பிடித்துவிட்டோம். அவனைக் கைது செய்தாகிவிட்டது!’

கடைசியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றி இந்தியாவுக்கு மூட்டைகட்டி அனுப்பிவிட்டார்கள். உனக்காக செலவழித்த பணத்தையும் போனால் போகிறது விட்டுவிடுகிறொம். நீ கிளம்பினால் போதும் என அனுப்பிவிட்டார்கள்.

ராணுவ அதிகாரி ஒருவரின் மகனான இவன் கேந்திரிய வித்யாலயாவில் படித்தவன். சண்டிகாரைச் சேர்ந்தவன்.

லேஹை பல்கலைக்கழக மாணவர் செய்தித்தாளில் போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்த இந்திய மாணவர் கைது என்று செய்தி வெளிவந்திருக்கிறது. இந்திய செய்தித்தாள்களிலும் இது பற்றிய கட்டுரைகள் விரிவாக வந்துள்ளன. டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தப் பையனைப் பற்றி புகார் அளித்த மாணவரிடமும் இது பற்றிப் பேசி எழுதி இருக்கிறது!

இந்த சம்பவத்தைப் படித்தபோது, அமீர்கானின் 3 இடியட்ஸ் படம்தான் ஞாபகம் வந்தது. அமீர்கானின் பாத்திரம் தன் முதலாளியின் பெயரில் படித்து, சான்றிதழை மட்டும் கொடுத்துவிட்டு, அறிவை வைத்துப் பிழைத்துக்கொள்ளும் கதை. படிப்பு உனக்கு சான்றிதழ் எனக்கு என்பது முதலாளி போடும் டீல்.

இந்த சம்பவத்தில் எல்லாமே போலியாக இருந்திருக்கிறது! பையன் பெரிய கிரிமினலாக இருந்திருக்கிறான். அமெரிக்காவிலிருந்து திரும்பிய பையன் என்ன செய்யப்போகிறானோ? அவன் அரசியலுக்கு வந்துவிட்டால்.. இதை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது!

அதெல்லாம் சரி… அவன் பாட்டுக்கு தன் வேலையுண்டு தானுண்டு எனப் படித்துக்கொண்டே இருந்திருக்கலாமே.. என்னத்துக்கு சமூக ஊடகத்தில் இதைப் பெருமையாக ஸ்டெப் பை ஸ்டெப்பாக விளக்கி எழுதவேண்டும்? இந்த கேள்விக்கான பதிலை மனநல நிபுணர்கள்தான் விளக்கவேண்டும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com