ஃப்ரீதானே என்று வாங்கியவரா நீங்க...? அப்போ சிறை கன்ஃபார்ம்?

சிம்கார்டு
சிம்கார்டு
Published on

ஒருவர் 9 சிம் கார்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால், ரூ. 2 லட்சம் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது .

தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய வியாபாரத்தைப் பெருக்க பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. அப்படி, ஒவ்வொரு நிறுவனமும் சில சலுகைகளோடு சிம்கார்டுகளை இலவசமாக விற்பனை செய்து வருகின்றன. சலுகைக்காக சிம்கார்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள், சலுகை முடிந்ததும், அதை தூக்கி வீசிவிடுகின்றனர்.

இந்த சலுகையை பொதுமக்கள் மட்டுமல்ல; குற்றச்செயலில் ஈடுபடும் சில குற்றவாளிகளும் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள், இலவச சிம்கார்டுகளை வாங்கி குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி வீசி விடுகின்றனர். இதனால், நாட்டில் பல குற்றச் சம்பவங்களுக்கு தொலைபேசியே காரணமாக இருக்கிறது.

இந்நிலையில், இதை தடுக்கும் விதத்தில் மத்திய அரசு புது சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

2023 தொலைத்தொடர்பு சட்டத்தின் படி, ஒருவர் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை மட்டுமே தனது பெயரில் வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் தனது பெயரில் 10 சிம்கார்டுகளோ அல்லது அதற்கு மேற்பட்டோ வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம்வரை அபராதம் விதிக்க முடியும். அதேபோல் அசாம், ஜம்மு காஷ்மீர் போன்ற பதற்றமான மாநிலங்களில் ஒருவர் அதிகபட்சமாக 6 சிம்கார்டுகள் மட்டுமே தங்களது பெயர்களில் வைத்திருக்க முடியும் என புதிய சட்டம் சொல்கிறது.

இதேபோல் ஒருவரை ஏமாற்றி அவர்களின் ஆவணங்களை பயன்படுத்தி சிம்கார்டுகள் உபயோகப்படுத்தியது தெரியவந்தாலோ சட்டவிரோதமாக வயர்லெஸ் கருவி வைத்திருந்தாலோ, தொலைதொடர்பு சேவைகளைத் தடை செய்யும் சாதனங்கள் வைத்திருந்தாலோ அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

இதுமட்டுமில்லாமல் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் சில விதிகளை இந்த சட்டம் அமல்படுத்துகிறது. அதாவது வணிக செய்திகளை வாடிக்கையாளரின் அனுமதி இன்றி அனுப்பினால் அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் சேவைகளை வழங்கத் தடையும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன எனபதை எப்படி அறிவது?

ஒரு ஆதார் அட்டையில் எத்தனை மொபைல் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைச் சரிபார்க்க, மோசடி மேலாண்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கான டெலிகாம் அனலிட்டிக்ஸ் (TAF-COP) என்ற ஆன்லைன் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்கள் பெயரில் உள்ள எண்களைத் தெரிந்துகொள்ள TAFCOP இணையதளத்தில் மொபைல் எண்ணை பதிவுசெய்து, உங்களது பெயரில் உள்ள எண்களை சரிபார்க்க முடியும். மேலும், அதில் உள்ள எண்களை நீக்கவும், தொடரவும் முடியும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com