பசுவைக் கடத்திச் செல்வதாக நினைத்து பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவரை பசுப் பாதுகாப்புக் குண்டர்கள் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பா.ஜ.க. ஆளும் அரியானாவில் பாசு பாதுகாப்பு குண்டர்களால் அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்படுவது சமீபத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக அரியானாவில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தை சேர்ந்தவர் ஆரியன் மிஸ்ரா (வயது 19). 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவரான இவர் கடந்த 23ஆம் தேதி நள்ளிரவு தனது நண்பர்களான ஹர்சித், சங்கியுடன் நூடுல்ஸ் சாப்பிடுவதற்காக டஸ்டர் காரில் சென்றுள்ளார்.
மாடுகளைக் கடத்துபவர்கள் டஸ்டர், ஃபார்ச்சூனர் போன்ற வாகனங்களைப் பயன்படுத்துவதாக பாசுப் பாதுகாப்புக் குண்டர்கள் சந்தேகிப்பதால், ஆரியனின் காரை நிறுத்துமாறு சில பாசுப் பாதுகாப்பு குண்டர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவர் காரை நிறுத்தாமல் சென்றதால், அவரை சுமார் 25 கிலோ மீட்டர் துரத்திச் சென்றுள்ளனர்.
ஆரியனின் காரானது, பல்வால் என்ற பகுதியில் உள்ள சுங்கச்சாவடியின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த காரின் மீது பசுப் பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டதில், ஆரியனின் நெஞ்சுப் பகுதியில் குண்டு பாய்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பசுப் பாதுகாப்பு குண்டர்கள் எனக் கூறப்படும் அனில் கௌசிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ் மற்றும் செளரவ் ஆகியோரை கைது செய்து, துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அரியானாவில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அடுத்தடுத்து இரு கும்பல் கொலை நடத்தப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.