“ஜூன் 4ஆம் தேதிக்குப் பின்னர் மோடி, பா.ஜ.க.வுக்கு ’குட் பை’ செல்வோம்” என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பான்ஸ்கான் தொகுதியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் ராகுல் காந்தி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
''ஜனநாயகத்தை காப்பதற்காகப் போராடுபவர்கள் ஒருபுறமும், அதனை அழிக்கப் பாடுபடுபவர்கள் மறுபுறமும் உள்ளனர். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் அக்னிபத் திட்டம் கிழித்து குப்பையில் எறியப்படும்.
அதானி, அம்பானிக்கு உதவுவதற்காக மோடியைக் கடவுள் பூமிக்கு அனுப்பிவைத்துள்ளார். விவசாயிகளுக்கும், ஏழைத் தொழிலாளிகளுக்கும் உதவுவதற்காக கடவுள் அவரை அனுப்பிவைக்கவில்லை. அப்படி ஏழைகளுக்கு உதவுவதற்காக அனுப்பியிருந்தால், கட்டாயம் அதனை செய்திருப்பார்.
எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்ததும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதமாக்குவோம்.
பா.ஜ.க.விடம் இருந்து நாடு சுதந்திரம் பெறும். நாட்டிற்கு உண்மையான நல்ல நாள்கள் இனி வரப்போகின்றன. ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு 'குட் பை' பாஜக, 'குட் பை' நரேந்திர மோடிதான். மக்கள் அவர்களுக்கு விடைகொடுத்துவிடுவார்கள். மக்களை ஏமாற்றும் நரேந்திர மோடிக்கு இன்னும் 7 நாள்களே உள்ளன என ராகுல் காந்தி பேசினார்.