ஜி20 தலைவர்கள் காந்தி நினைவிடத்தில் மரியாதை!

காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தும் ஜி20 தலைவர்கள்
காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தும் ஜி20 தலைவர்கள்
Published on

ஜி20 தலைவர்கள் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜி20 உச்சிமாநாட்டின் முதல் நாள் கூட்டம் நேற்று முடிவடைந்தது. இதில், ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20-இன் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டது முதல் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான போக்குவரத்து ஒப்பந்தம், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி எனப் பல சிறப்பம்சங்கள் உறுதி செய்யப்பட்டன.

அதேபோல், இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டுத் தீர்மானத்தில் உக்ரைன் போர் விவகாரம் பற்றி அழுத்தமாகக் குறிப்பிடப்படவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஜி20 தலைவர்கள் நேற்றிரவு குடியரசுத் தலைவர் அளித்த விருந்தில் கலந்து கொண்ட நிலையில், இன்று காலை ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு கதர் சால்வையை அணிவித்து பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷிசுனக், மற்றும் ஜி20 தலைவர்கள் ஒன்றுபோல் நின்று காந்தி நினைவிடத்தில் மலைர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அங்குள்ள அமைதிச்சுவரில் தலைவர்கள் குறிப்பு எழுதி கையொழுத்திட்டனர்.

அதேபோல், இன்று நடைபெறும் இரண்டாம் நாள் அமர்வில், மதியம் 12:30 மணி வரை உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வு, 'ஒரு எதிர்காலம்' என்ற பெயரில் நடைபெறவுள்ளது.

இந்த அமர்விற்கு பிறகு பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுயேல் மேக்ரானை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதனை தொடர்ந்து, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், தென் கொரியா, ஐரோப்பிய யூனியன், பிரேசில், நைஜீரியா நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com