வயநாட்டில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி, ‛‛ நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்திற்கு நாம் தான் பொறுப்பு'' என கூறியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலமும், நேரிலும் ஆய்வு செய்த பிரதமர் மோடி, முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின்னர் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைக்க ரூ. 2 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மனு அளித்தார்.
பிறகு கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:
“நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த உடன் அனைத்து தகவல்களையும் அறிந்து வந்தேன். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், ராணுவம், தன்னார்வலர்கள், மருத்துவர்கள் என அனைவரும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த பேரிடர் சாதாரணமானது அல்ல. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஆயிரக்கணக்கானவர்களின் கனவுகளை தகர்த்துள்ளது. சூழ்நிலையை நேரில் பார்த்தேன். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களையும், காயமடைந்தவர்களையும் சந்தித்தேன்.
பேரிடர் குறித்து அறிந்ததும் முதலமைச்சரைத் தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்தேன். கேரளாவுக்கு மத்திய அரசு தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவி வந்தது. அது தொடரும்.
இறந்தவர்களின் உறவினர்கள் தனித்துவிடப்பட மாட்டார்கள் என அவர்களுக்கு உறுதி அளிக்கிறேன். இந்த நேரத்தில் நாம் அனைவரும் அவர்களுடன் துணை நிற்கிறோம். மறுவாழ்வு பணிகளுக்கு பணம் தடையாக இருக்காது. கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்கும். நிதி பற்றாக்குறையால் எந்த பணியும் நிறுத்தப்படாது. அனைத்து உதவிகளும் தடையின்றி செய்யப்படும். மாநில அரசுடன் இணைந்து செய்ய வேண்டிய மறுவாழ்வு திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்திற்கு நாம் தான் பொறுப்பு.
பாதிப்பு குறித்த அறிக்கை கிடைத்த பின்னர் உள்கட்டமைப்பு, வீட்டுவசதி, பள்ளி கட்டடம், குழந்தைகளின் எதிர்காலம் உட்பட அனைத்து அனைத்து பணிகளுக்கும் மத்திய அரசு உதவி செய்யும். ” என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி வருகையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட மீட்பு பணிகள் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும் என்று மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.