பழைய கட்டடம்… முன்னாள் பிரதமர் மன்மோகன்: மோடி பேசியது என்ன?

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

“மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, வாக்குக்குப் பணம் கொடுத்த முறைகேட்டுக்கு பழைய நாடாளுமன்றம் சாட்சியாக இருந்தது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்று கடைசிக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்த விவாதத்தைத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது, “ நாம் புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்வதற்கு முன்னர், பழைய நாடாளுமன்ற வரலாற்றை மீண்டும் ஒரு முறை நினைவுகூர்வோம்.” என்றார் அவர்.

மேலும், “இந்தக் கட்டடத்திற்குள் நான் முதல் முறையாக நுழைந்தபோது, இந்த அளவிற்கு மக்களின் அன்பைப் பெறுவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

சந்திரயான்-3 வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடையச் செய்துள்ளது. தொழில்நுட்பம், அறிவியலோடு இணைந்த புதிய பாதை தொடங்கி இருக்கிறது. இந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்.

ஜி-20 உச்சி மாநாட்டின் வெற்றி, இந்திய மக்களின் வெற்றி. இது எந்த ஒரு தனிநபர் அல்லது கட்சியின் வெற்றி அல்ல. ஜி-20 மாநாட்டால் இந்தியா பற்றிய எதிர்மறை எண்ணம் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜி-20 மாநாடு விடையளித்துள்ளது.

முன்னேறிய வகுப்பினரில் ஏழைக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டதும், இந்த அவைதான். வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதும், இந்த அவையில்தான். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, வாக்களிப்பதற்கு பணம் கொடுக்கப்பட்ட முறைகேட்டிற்குச் சாட்சியாகவும் இந்த அவை இருக்கிறது.

நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் நாடாளுமன்றத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஒவ்வோர் ஊழியருக்கும் மனமார்ந்த நன்றிகள்.” என்று மோடி பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com