விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் நாளை மறுநாள் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்ததை தொடர்ந்து, ஹரியானவில் உள்ள 7 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியதால் அந்த சட்டங்கள் திரும்ப பெறப்பட்டன.
தற்போது அதேபோன்றதொரு போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் தொடங்கியுள்ளனர். தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி, போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி ஆகிய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
பிப்ரவரி 13ஆம் தேதி டெல்லியில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால், இந்த பேரணியை தடுக்கும் நோக்கில், பஞ்சாபிலிருந்து ஹரியானாவை இணைக்கும் அனைத்து பாதைகளையும் போலீசார் மூடியுள்ளனர். சிமென்ட் தடுப்புகளை உருவாக்கியும், சாலையில் ஆணிகளை பதித்தும் தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். மட்டுமல்லாது டிராக்டர் மூலம் விவசாயிகள் ஆற்று வழியாக வந்துவிடக்கூடாது என்பதற்காக, ஆற்று படுகையில் பெரிய பள்ளத்தையும் தோண்டியுள்ளனர்.
மட்டுமல்லாது மணல் மூட்டைகளை கொண்ட தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்கு காவல்துறையினருடன், துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என ஹரியான அரசு எச்சரித்திருக்கிறது. தவிர, ஹரியானா - பஞ்சாப் எல்லையில் அமைந்திருக்கும் அம்பாலா, அம்பாலா, குருஷேத்ரா, கைதல், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய மாவட்டங்களில் வரும் பிப்ரவரி 13 வரை இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் துண்டிக்கப்படுவதாக ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.
போராட்டத்தைத் தவிர்க்க மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது. முதல் சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், இதில் உடன்பாடு எட்டப்படாததால் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறது. இருப்பினும் தங்களது பேரணி முடிவில் உறுதியாக இருப்பதாக 200க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.