14,000 விவசாயிகள்…1200 டிராக்டர்கள்…! தீவிரமடையும் போராட்டம்!

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Published on

பஞ்சாப் - அரியானாவை ஒட்டிய சாம்பு எல்லையில் 14 ஆயிரம் விவசாயிகள், 1200 டிராக்டர்கள் அணிவகுத்து நிற்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13ஆம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்து டெல்லி நோக்கிச் செல்லும் போராட்டத்துக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். பஞ்சாப் - அரியானாவை ஒட்டிய சாம்பு எல்லையில் 14 ஆயிரம் விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர். 1200 டிராக்டர்கள், 300 கார்கள், 10 மினி பஸ்களில் விவசாயிகள் குவிந்துள்ளனர். இதனை ஒட்டி பஞ்சாப், அரியானா என டெல்லியை ஒட்டிய எல்லைகளில் போலீஸார், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த முறை டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேற முயன்றபோது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில் இந்தமுறை அதை எதிர்கொள்ளும் வகையில் விவசாயிகள் முகத்தில் கவசம் அணிந்து தயாராகி வருகின்றனர். சாக்குகளை தண்ணீரில் நனைத்து வைத்துள்ளனர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டால் அவற்றின் மீது போட்டு புகையை மட்டுப்படுத்த தயாராக உள்ளனர். மேலும் டிராக்டர்களையே தங்குமிடம் போல் தயார் செய்தும் வைத்துள்ளனர். எப்படியாவது டெல்லி நோக்கி முன்னேறிவிட வேண்டும் என்று அனைத்து முன்னேற்பாடுகளையும் அவர்கள் செய்து வருகின்றனர்.

விவசாயிகளின் முன்னேற்பாடுகள் ஒருபுறம் இருக்க காவல்துறையும், துணை ராணுவப் படையினரும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாத வண்ணம் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com