விவிபேட் ஒப்புகைச் சீட்டு வழக்கு- அரசின் நிலைக்குச் சாதகமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

விவிபேட் ஒப்புகைச் சீட்டு வழக்கு- அரசின் நிலைக்குச் சாதகமாக உச்சநீதிமன்றத்  தீர்ப்பு!
Published on

மக்களவைத் தேர்தலில் இன்று இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடந்துவரும் நிலையில், வாக்கு ஒப்புகைச்சீட்டு வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்குச் சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சில தேர்தல்களாக நாடு முழுவதும் இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், இதன் மீதான புகார்களும் குற்றச்சாட்டுகளும் அதிகரித்தன. தொடர்ந்து, உச்சநீதிமன்றம்வரை பிரச்னை சென்றது. 

பல்வேறு தரப்பினரும் பழையபடி வாக்குச்சீட்டு முறையையே கொண்டுவர வேண்டும் என்றும், பா.ஜ.க. ஆட்சியில் இப்போது புதிதாக தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள முறையை மாற்றி, முன்னர் இருந்தபடி வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச்சீட்டு இயந்திரம் என்பவை மட்டுமே இருக்கவேண்டும்; மூன்றாவதாக கட்டுப்பாட்டுக் கருவியை அகற்றவேண்டும் என்றும் மனுக்களில் கோரப்பட்டிருந்தது. 

பல கட்ட விசாரணைக்குப் பிறகு, இன்று காலையில் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. 

அதில், வாக்குச்சீட்டு முறையைவிட வாக்குப்பதிவு இயந்திரம் அறிவியல்ரீதியானது; அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி, மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 

வாக்குப்பதிவில் சந்தேகம் இருப்பதாகக் கருதும் வேட்பாளர்கள் ஏற்கெனவே உள்ள முறைப்படி 5 சதவீதம் வாக்குகளை விவிபேட் எனப்படும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணிப் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறினர். 

சரிபார்க்க விரும்புவோர் அதற்கு கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்றும் தவறு உறுதியானால் கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்  கூறியுள்ளனர்.  

பல எதிர்க்கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் புகுத்தப்பட்டுள்ள புதிய முறையை எதிர்க்கும்நிலையில், பா.ஜ.க.வோ ஆதரித்து நியாயப்படுத்தியும் பேசிவருகிறது. இப்போது வந்துள்ள தீர்ப்பு அக்கட்சியின் நிலைப்பாட்டுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com