15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசம், பீகார், சத்தீஷ்கர், குஜராத், அரியானா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், இமாச்சலபிரதேசம், கர்நாடகா, மராட்டியம், தெலுங்கானா, உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அடுத்த மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை வேட்புமனுவை திரும்பப்பெறலாம்.
உத்தரப் பிரதேசம் (10), மகாராஷ்டிரம் (6), பீகார் (6), மேற்கு வங்கம் (5), மத்தியப் பிரதேசம் (5), குஜராத் (4), கர்நாடகம் (4), ஆந்திரப் பிரதேசம் (3), தெலங்கானா (3), ராஜஸ்தான் (3), ஒடிஸா (3), உத்தரகண்ட் (1), சத்தீஸ்கர் (1), ஹரியாணா (1), மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் (1) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
13 மாநிலங்களைச் சேர்ந்த 50 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. மேலும், 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 3 ஆம் தேதி நிறைவடைய உள்ளது.