அரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் முன்னதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு பிரச்சார வேலைகளில் கட்சிகள் இறங்கியுள்ளன. இதனிடையே தேர்தல் தேதியை மாற்றுமாறு முன்கூட்டியே மாற்றுமாறு பா.ஜ.க. அரியானா நிர்வாகிகள் பகிரங்க வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நிலையில், இன்று மாலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அரியானா சட்டப்பேரவைத் தேர்தலானது முன்னர் அறிவிக்கப்பட்ட அக்.1ஆம் தேதிக்குப் பதிலாக, அக். 5ஆம் தேதி அன்று நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய, மாநிலக் கட்சிகளிடமிருந்து வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டதாகவும் நூற்றாண்டு கடந்த அசோஜ் அமாவாஸ்ய பண்டிகை கொண்டாட்டத்துக்காக அரியானாவிலிருந்து பிஷ்னோய் பிரிவு மக்கள் இராஜஸ்தானுக்குக் கூட்டமாகச் செல்வார்கள் என்று அகில இந்திய பிஷ்னோய் மகாசபா அமைப்பிடமிருந்தும் தேதியை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதை நிராகரித்தால் பெருமளவு மக்கள் வாக்களிக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதேசமயம், அக்.1 அன்று ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் அக்.8ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா, திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆளும் பா.ஜ.க. தேர்தலுக்கு முன்னரே தோல்வியின் அறிகுறிகளைத் தெரிந்துகொண்டுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் அரியானா பிரிவு கருத்து தெரிவித்துள்ளது.