தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தகவலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, பா.ஜ.க. ஒரே ஆண்டில் மட்டும் 2,555 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க பயன்படுத்தப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிடப்பட்டது.
எஸ்.பி.ஐ. வங்கி 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களைக் கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திர விவரங்களை அதன் தளத்தில் பதிவேற்றம் செய்தது. ஆனால், முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வழங்கவில்லை. தேர்தல் பத்திரங்களை வாங்கியது யார்? எந்த தேதியில் வாங்கினார்கள்? எவ்வளவு தொகை கொடுத்து வாங்கினார்கள்? எந்த அரசியல் கட்சி எந்த தேதியில் குறிப்பிட்ட தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றிக் கொண்டது என்ற விவரங்களை வழங்க வேண்டும் என மீண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி எஸ்.பி.ஐ. வங்கி வழங்கிய புதிய விவரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
புதிய தகவல்களில் எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளிடம் இருந்து நிதி பெற்றன என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, பா.ஜ.க. ரூ.6,986.5 கோடியை தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றுள்ளது. பா.ஜ.க.வுக்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.1,397 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது.
பா.ஜ.க. 2018- மார்ச் மாதம் மட்டும் ரூ.210 கோடி பெற்றுள்ளது.
2018-19ஆம் நிதி ஆண்டில் ரூ.1,451 கோடியும், 2019-20ஆம் நிதி ஆண்டில் ரூ. 2,555 கோடியும், 2021-21ஆம் நிதி ஆண்டில் ரூ. 22.38 கோடியும், 2021-22- நிதி ஆண்டில் ரூ.1,033 கோடியும், 2022-23ஆம் நிதி ஆண்டில் ரூ.1,294 கோடியும் 2023-24 நிதி ஆண்டில் ரூ.421 கோடியையும் பா.ஜ.க. நன்கொடையாக பெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது.
அதைபோல், தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க. பெற்ற 656.5 கோடியில் ரூ.509 கோடியை லாட்டரி மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் கொடுத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக காங்கிரஸ் கட்சி ரூ. 1,334.35 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. அ.தி.மு.க. பெற்ற 6 கோடி ரூபாயில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் மட்டும் ரூ.5 கோடி வழங்கியுள்ளது.