மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியேற்க வந்தபோது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, நெட் தேர்வு ரத்து போன்றவை இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீட் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. மேலும் புதிதாக 5 வழக்குகளை பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், 18ஆவது நாடாளுமன்றம் நேற்று கூடியது. இடைக்கால மக்களவைத் தலைவர் முன்னிலையில் எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பதவியேற்க வந்தபோது, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ’நீட்... நீட்' என்று எதிர்ப்பு கோஷமிட்டனர். அதை பொருட்படுத்தாத தர்மேந்திர பிரதான் ஒடியா மொழியில் பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக, பிரதமர் மோடி பொறுப்பேற்றபோது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அரசியல் அமைப்பு புத்தகத்தை உயர்த்தி காட்டி முழக்கமிட்டனர். இதற்கு பா.ஜ.க., எம்.பி.க்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டனர். இது அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்தே ஒவ்வொரு எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டனர்.