“வெறுப்புணர்வைப் பரப்பும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஒளிபரப்பும் முடிவை தூர்தர்ஷன் உடனடியாகக் கைவிட வேண்டும்” என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து, மதம் மாற்றி, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாகச் சித்தரித்து எடுக்கப்பட்ட திரைப்படம் தி கேரள ஸ்டோரி. இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உட்பட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்தப் படம் கேரளா, தமிழ்நாடு உட்பட்ட மாநிலங்களில் வெளியானது.
கடந்த ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் 225 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகத் தகவல் வெளியானது. தியேட்டரில் வெளியான பிறகு கடந்த பிப்ரவரியில் ஓ.டி.டி. தளத்திலும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்புவதாக தூர்தர்ஷன் அறிவித்துள்ளது. தேர்தல் சமயத்தில் தி கேரளா ஸ்டோரி சினிமா ஒளிபரப்பப்படுவது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தி கேரளா ஸ்டோரி சினிமா தூர்தர்ஷனில் ஒளிபரப்புவதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில், "கேரள மாநிலத்துக்கு எதிராக வெறுப்புணர்வைப் பரப்பும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஒளிபரப்பும் முடிவை தூர்தர்ஷன் உடனடியாக கைவிட வேண்டும். தேர்தல் சமயத்தில் கேரளத்தை இழிவுபடுத்தும் நோக்கில் நாட்டின் அதிகாரபூர்வ செய்தி சேனலை மத்திய அரசு பயன்படுத்துவதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். பல மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக பரஸ்பரம் சகோதரர்களைப் போல வாழும் மாநிலம் கேரளம். உலகத்தின் முன்னிலையில் தலைநிமிர்ந்து நிற்கும் கேரளாவை அவமானப்படுத்தவும், மத மோதலை வளர்க்கவும் சங்பரிவாரின் மூளையில் உதித்ததுதான் இந்த சினிமா.
பல துறைகளில் முன்னிலையில் உள்ள கேரளத்தை சோமாலியா எனச்சொல்லி அவமானப்படுத்தியவர்கள், இப்போது மதமாற்றத்தின் கேந்திரம் என பிரசாரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சங்பரிவாரின் வகுப்புவாத அஜண்டாவுக்கு தூர்தர்ஷன் போன்றவை கைப்பாவையாகச் செயல்படக்கூடாது. கேரளா ஸ்டோரி சினிமாவை ஏப்ரல் 5ஆம் தேதி ஒளிபரப்புவதாக அறிவித்தது, கேரளத்தை அவமானப்படுத்துவதற்கு சமம். வகுப்புவாதச் செயல்பாடுகளுக்கு எதிராக மதச்சார்பற்ற கேரளம் ஒன்றுபட்டு நிற்கும்." என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.