கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தை சேர்ந்த 22வயதான ரங்கராஜ் என்ற நபர் கடந்த 2015ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவரை கொலை செய்து அந்த பிணத்துடன் உடலுறவு கொண்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை துமகூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றவாளியான ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும், பிணத்துடன் உடல் உறவு கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளியான ரங்கராஜ் தரப்பில் கர்நாடக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினர். அதில் குற்றவாளியான ரங்கராஜனுக்கு கொலை செய்த குற்றத்திற்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை செல்லும் எனவும், பிணத்துடன் உடல் உறவு கொண்ட குற்றத்திற்காக வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
மேலும் இந்த வழக்கின் தீர்ப்பில், “குற்றவாளி பிணத்துடன் உறவு கொண்டுள்ளார். இது சட்டப்படி குற்றமாகுமா? அல்லது குற்றம் இல்லையா? சட்டப்படி ஒருவரின் இறந்த உடலை மனிதராக கருத முடியாது. அதனால் இந்திய தண்டனை சட்டம் 375, 377 (இயற்கைக்கு மாறான உடலுறவு) ஆகியவை குற்றமாக பொருந்தாது. 376வது கற்பழிப்பு பிரிவின் கீழ் அது தண்டனை உரிய குற்றம் ஆகாது. இதனால் இறந்துபோன ஒருவரின் உடலுடன் உறவு கொள்வது குற்றம் ஆகாது என்று குறிப்பிட்டனர்.
அத்துடன், இறந்துபோன ஒருவரின் உடலுடன் உறவு கொள்வதை குற்றம் என்பதை உறுதி செய்ய இந்திய தண்டனை சட்டத்தில் இடம் வேண்டும் அல்லது புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.