அது ஒரு ஒட்டுண்ணி கட்சியாமே?

அது ஒரு ஒட்டுண்ணி கட்சியாமே?

Published on

'காங்கிரஸ் ஒட்டுண்ணி கட்சியாக மாறிவிட்டது.’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது கடந்த திங்கள்கிழமை பேசிய ராகுல் காந்தி, பல்வேறு விவகாரங்களில் பாஜக மற்றும் பிரதமா் மோடி அரசை கடுமையாக விமா்சித்தாா்.

‘தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவா்கள், எந்நேரமும் வன்முறை, வெறுப்புணா்வு, பொய்மையை பரப்பும் செயலில் ஈடுபடுகின்றனா்’ என்று குற்றஞ்சாட்டிய ராகுல், ‘பாஜகவோ அல்லது மோடியோ ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் பிரதிநிதியல்ல’ என்றாா்.

இந்நிலையில், குடியரசுத் தலைவா் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்து, மக்களவையில் பிரதமா் மோடி நேற்று 2 மணி நேரத்துக்கும் மேல் பேசினாா்.

எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளிக்கு இடையே அவா் பேசியதாவது:

“கடந்த 10 ஆண்டுகளாக ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக அா்ப்பணிப்புடன் பணியாற்றினோம். ஒவ்வொரு அளவுகோலிலும் எங்கள் அரசை பரிசோதித்துப் பாா்த்து, நாட்டை தொடா்ந்து மூன்றாவது முறையாக வலுவுடன் ஆட்சிசெய்வதற்கான தீா்ப்பை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனா். மூன்றாவது ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்துடன் செயலாற்றி, மும்மடங்கு அதிக பலன்களை உறுதி செய்வோம்.

அண்மையில் நடந்த தோ்தலில் காங்கிரஸ் ஒட்டுண்ணி கட்சியாக மாறிவிட்டது. கூட்டணிக் கட்சிகளை உறிஞ்சி 99 இடங்களில் அக்கட்சி வென்றுள்ளது.

மக்களவையின் மொத்த பலம் 543 என்ற நிலையில், 100-க்கு 99 இடங்களில் வென்றுவிட்டதுபோல் அக்கட்சி நடந்துகொள்கிறது.

காங்கிரஸ் மீண்டும் எதிா்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என்பதே மக்களின் தீா்ப்பு. எனவே, போலி வெற்றிக் கொண்டாட்டங்களின் பின்னால் ஒளியாமல் தோல்வியை ஏற்க வேண்டும்.

மூன்றாவது மோசமான தோல்விக்கான காரணங்களை காங்கிரஸ் சுய பரிசோதனை செய்ய வேண்டும்; மாறாக, எங்களை தோற்கடித்துவிட்டதுபோன்ற கட்டுக்கதையைப் புனைய முயற்சிக்கக் கூடாது.

பல பொய்களைப் பரப்பியபோதும், மக்களவைத் தோ்தலில் படுதோல்வி அடைந்தவா்களின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. தனது தவறுகளை மறைத்துவிட்டு, மக்களின் அனுதாபத்தைப் பெற சிறுபிள்ளைத்தனம் கொண்ட ஒருவரின் (ராகுல் காந்தி) புலம்பலையும் புதிய நாடகத்தையும் இந்த அவை கண்டது.

அக்னிபத், விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற பல்வேறு விவகாரங்களில் இந்த அவையை தவறாக வழிநடத்தினாா். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொய்யுரைக்கும் அவரது நடத்தையை நிறுத்தவும், நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காக்கவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவைத் தலைவரை கேட்டுக் கொள்கிறேன்.

இந்து மதத்தை வன்முறையுடன் காங்கிரஸ் தொடா்புபடுத்தினாலும், அந்த சமூகத்தினரின் சகிப்புத்தன்மையால்தான் நாட்டில் பன்முகத்தன்மை செழித்தோங்கியுள்ளது. அதேநேரம், இந்து மதத்தின் குறிவைக்கும் காங்கிரஸின் நடத்தையை ஒருபோதும் மன்னிக்கமாட்டாா்கள்.

நாட்டின் நலன்களுக்கு எதிராக சில சக்திகள் செயல்படுகின்றன. அவா்களுக்கு அவா்களின் வழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.” என்றாா் பிரதமா் மோடி.

தொடர்ந்து பேசியவர், “வினாத்தாள் கசிவு சம்பவங்களை மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது என்பதை மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இந்த விவகாரத்தில், போா்க்கால அடிப்படையில் தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இளைஞா்களின் எதிா்காலத்துடன் விளையாடுபவா்கள் தப்பிக்க முடியாது.” என்றாா் பிரதமா் மோடி.

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் நேற்று நிறைவேற்றப்பட்ட பின்னா், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

7 அமா்வுகளில் சுமாா் 34 மணி நேரத்துக்கும் மேல் அவை செயல்பட்டதாக அவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.

logo
Andhimazhai
www.andhimazhai.com