உள் ஒதுக்கீட்டுத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு... மத்திய அமைச்சர்!

மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான்
மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான்
Published on

பட்டியல் சாதிகளுக்குள் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டங்களுக்குத் தடைவிதிக்க மறுத்து உச்சநீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தது. ஏழு நீதிபதிகள் அமர்வில் 6 பேர் உள் ஒதுக்கீடு சரிதான் எனத் தீர்ப்பு வழங்கினார்கள்.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக லோக் ஜனசக்தி கட்சி (இராம்விலாஸ்) தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்.

பாட்னாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, இந்த விவகாரம் பற்றி அவர் பேசினார்.

அப்போது, “ பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடுகளைச் செய்துகொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை எதிர்த்து, எங்கள் கட்சி மேல்முறையீடு செய்யும்.” என்றார் அவர்.

பட்டியல் சாதி இட ஒதுக்கீட்டில் வசதிபடைத்தவர்களை விலக்குவதை ஏற்கவே முடியாது; விளிம்புநிலையில் உள்ள தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாகக்கூடிய பட்டியல் சாதிப் பிரிவினரின் மேம்பாட்டுக்கு எந்தவகையிலும் இந்த உள் ஒதுக்கீடு பயன்படாது என்றும் சிராக் கூறினார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பில் ஒரு முறைகூட தீண்டாமையைப் பற்றிக் குறிப்பிடாதது வியப்பளிக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், பட்டியல் சாதியினரில் கல்வி கற்கும் வாய்ப்பு பெற்ற ஓரளவுக்கு வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் தீண்டாமைக்கு உள்ளாகிறார்கள்; எனவே, உள் ஒதுக்கீடு என்பது நியாயமானது அல்ல என்று விளக்கம் அளித்தார்.

ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிலைப்பாடு குறித்து கருத்துக்கூற சிராக் மறுத்துவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் மகாதலித் எனும் உள் பிரிவை நிதிஷ்குமார் அரசாங்கம் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

சாதிவாரிக் கணக்கெடுப்பை தான் ஆதரிப்பதாகவும், ஆனால் அதன் முடிவுகளை வெளியிடாமல் அரசாங்கமே வைத்துக்கொண்டு கொள்கைகளை வகுக்க மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் சிராக் பாஸ்வான் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com