நிலவில் சந்திராயன்- 3: சுற்று வட்டப் பாதை 2-வது முறையும் குறைக்கப்பட்டது

சந்திராயன் -3
சந்திராயன் -3
Published on

சந்திராயன் - 3 விண்கலத்தின் இரண்டாம் கட்ட நிலவுச் சுற்றுப்பாதைப் பயணமும் திட்டமிட்டபடி இன்று மதியம் குறைக்கப்பட்டது.

நிலவில் இறங்கி ஆய்வுசெய்யும் சந்திராயன் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ இந்த முறை வெற்றிகரமாகக் கொண்டுசென்றவண்ணம் இருக்கிறது. கடந்த ஜூலய் 14ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட சந்திராயன் 3 விண்கலம், கடந்த ஒன்றாம் தேதி புவிவட்டப் பாதையிலிருந்து நிலவின் வட்டப் பாதைக்குள் உந்தித் தள்ளப்பட்டது.

ஆக. 5ஆம் தேதியன்று நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாகக் கொண்டுசெல்லப்பட்டு, 164 கிமீ- 18074 கிமீ எனும் நீள்வட்டப் பாதையில் சுற்றும்படி அதன் பயணம் முதல் கட்டமாகக் குறைக்கப்பட்டது.

அதையடுத்து, இரண்டாம் கட்டமாக 6ஆம் தேதி 170 கிமீ- 4313 கிமீ எனும் சுற்றுவட்டப் பாதைக்கு சந்திராயன் 3 இன் இயக்கம் மாற்றியமைக்கப்பட்டது.

இன்று, மூன்றாவது கட்டமாக, 174 கிமீ - 1437 கிமீ எனும் சுற்றுவட்டத்துக்கு சந்திராயனின் பயணப்பாதை மேலும் குறுக்கப்பட்டது.

அடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று மேலும் ஒரு சுற்றுக்கு சந்திராயனின் சுற்று குறைக்கப்படும். கடைசியாக, நிலவில் இருந்து சரிக்குச் சமமாக 100 கிமீ சுற்றுவட்டப் பாதைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் தரையிறக்கும் முயற்சிகள் தொடங்கும்.

அதுதான் இந்த மொத்த சந்திராயன் திட்டத்திலேயே அதி முக்கியமான கட்டம் ஆகும். கடந்த முறை கடைசிச் சுற்றுவரை எல்லாமே சரியாக அமைந்திருந்தன. தரையிறங்கும் சமயத்தில் சிக்கலாகி, திட்டம் தோல்வியைத் தழுவியது. அதுபோல மீண்டும் ஏற்பட்டுவிடாதபடி விஞ்ஞானிகள் மிகவும் கவனமாக ஒவ்வொன்றையும் செய்துவருகின்றனர்.

ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று சந்திராயன் விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com