ஒரு வாரம் நிலவில்... சந்திரயான் -3 செய்தது என்னென்ன?

விக்ரம் லேண்டரைப் படம்பிடித்த பிரக்ஞான் ரோவர்
விக்ரம் லேண்டரைப் படம்பிடித்த பிரக்ஞான் ரோவர்ISRO
Published on

நிலவில் தரையிறங்கிய சந்திரயான் - 3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் இரண்டு கலங்களும் ஒரு வாரமாக ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, பிரக்ஞான் ரோவர் கருவியானது விக்ரம் லேண்டர் கலத்தைப் படம்பிடித்து அனுப்பியுள்ளது.

இன்று காலையில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இரண்டு படங்களை வெளியிட்டுள்ளது.

ஸ்மைல் பிளீஸ் என லேண்டரை ரோவர் சொல்வதாக இஸ்ரோ பூடகமாகக் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் இதைப் பகிர்ந்துள்ளனர்.

இதை, சந்திரயான் - 3 திட்டத்தின் அதி முக்கியமான படம் என்பதாக, இமேஜ் ஆஃப் தி மிஷன் என்று இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. அதாவது முன்னதாக ரோவர் கலம் தரையிறங்கியதை லேண்டர் படம்பிடித்திருந்தது. அதைப்போலவே ரோவரும் லேண்டரைப் படம்பிடிப்பது சந்திராயன் திட்டத்தின் முக்கிய கட்டம். அது இப்போது நடைபெற்றுள்ளது.

பிரக்ஞான் ரோவர் கலத்தில் உள்ள அலைவுறு கேமரா- நேவ்கேம் இந்தப் படத்தை எடுத்துள்ளது. இந்த கேமராவை பெங்களூருவில் உள்ள மின்னணு ஒளியியல் அமைப்பு ஆய்வகமான லியோஸ், சந்திரயான் - 3 திட்டத்துக்காக சிறப்பாக உருவாக்கியிருந்தது நினைவிருக்கலாம்.

பிரக்ஞானின் இரண்டாவது படத்தில், லேண்டரின் சேஸ்ட் (ChaSTE), இல்சா (ILSA) கருவிகள் வேலைசெய்வதும் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 27ஆம் தேதியன்று பிரக்ஞான் ரோவர் தன்னுடைய பாதையில் நான்கு மீட்டர் விட்டம் கொண்ட குழியை அதற்கு 3 மீட்டர் தொலைவுக்கு முன்னரே கண்டறிந்து, கவனமாக அந்தப் பாதையைத் தவிர்த்து தன் திசையை மாற்றிக்கொண்டது.

அன்றைய நாளில் லேண்டரில் உள்ள சேஸ்ட் கருவியானது நிலவின் தரையில் 10 செ.மீ. அளவுக்கு தோண்டியதில், அதில் பலவிதமான வெப்பநிலை பதிவானதைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com