தமிழகத்துக்கு 5,000 கனஅடி நீா் திறந்துவிட வேண்டும் என காவிரி நீா் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
கர்நாடகம் வழங்க வேண்டிய நிலுவை நீா் அளவு அதிகமாக உள்ளதால் கூடுதல் நீரைத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று தமிழகமும், வறட்சி நிலவுவதால் ஆணையம் நிர்ணயித்த நீா் அளவை மறு ஆய்வு செய்து குறைத்து உத்தரவிட வேண்டும் என்று கர்நாடகமும் உச்சநீதிமன்றத்தை அணுகின.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா். கவாய், பி.எஸ். நரசிம்மா, பிரசாந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
தமிழகம், கர்நாடகம், மத்திய அரசின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், காவிரி நீா் மேலாண்மை ஆணையம், காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றில் வேளாண் மற்றும் நீா் மேலாண்மை நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் வறட்சி, மழைப் பற்றாக்குறை, அணையின் நீா் அளவு ஆகியவற்றைக் கணக்கிட்டுத்தான் உத்தரவுகளை வழங்குகிறார்கள்.
கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களில் நிலவும் சூழலின் அடிப்படையில் 15 நாள்களுக்கு ஒருமுறை அவர்கள் கூடி பிறப்பிக்கும் உத்தரவுகளை சம்பந்தமில்லை அல்லது புறம்பானது என ஒதுக்கிவிட முடியாது. ஆகையால், ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவை பிறப்பித்த உத்தரவுகளில் தலையிட விரும்பவில்லை’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.