மக்களின் நல்வாழ்வுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என்று கூறியுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அதைத் தேர்தலுக்காக தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் தேசிய ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று நிறைவடைந்தது. இதையொட்டி, அந்த அமைப்பின் ஊடக பொறுப்பாளர் சுனில் அம்பேகா் செய்தியாளா்களிடம் கூறுகையில், “ஜாதி மற்றும் ஜாதி உறவுகள் இந்து சமூகத்திலும் தேசிய ஒற்றுமையிலும் மிக முக்கியமானவை. மிகுந்த எச்சரிக்கையுடன் இது கையாள வேண்டும். பின்தங்கிய மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படுவோருக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அந்தக் கணக்கெடுப்பை மக்களின் நல்வாழ்வுக்குப் பயன்படுத்த வேண்டுமே தவிர, தோ்தலுக்கான அரசியல் கருவியாகப் பயன்படுத்தக் கூடாது.
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரை உள்வகைப்படுத்துவது தொடா்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்தச் சமூகத்தினா் உடன்படாதவரை அதுதொடா்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள இடஒதுக்கீடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை ஆா்எஸ்எஸ் எப்போதும் ஆதரிக்கிறது’ என்றவர், தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மிஷினரிகளால் ஏராளமான மதமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கவலைத் தெரிவித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெளிவான நிலைப்பாட்டை அறீக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவா அல்லது எதிரான நிலைபாட்டில் உள்ளதா என்பதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுஸ்மிருதிக்கு ஆதரவாகச் செயல்படும் சங்பரிவார், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழை சமூகத்தின் பங்கேற்பைப் பற்றி கவலைப்படுகிறதா இல்லையா..?" என்று அதில் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.