மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறித்து மோசடி செய்ததாக கர்நாடகத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஜனாதிகார சங்கர்ச சங்கத்தனே எனும் அமைப்பைச் சேர்ந்த ஆதர்ஷ் ஐயர் என்பவர் இதுதொடர்பாக புகார் அளித்திருந்தார். அதில் நிர்மா உட்பட பலர் தன்னிடம் தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனுவை விசாரித்த மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், நிர்மலா முதலிய குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிய உத்தரவிட்டது.
அதன்படி, பெங்களூர் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிந்தனர்.
இதையடுத்து பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “ இப்போது நிர்மலா மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. அவரைப் பதவிவிலகுமாறு பா.ஜ.க.வினர் சொல்வார்களா? (என்னைச் சொல்லும்) நிர்மலா சீதாராமன் பதவிவிலக வேண்டும். குமாரசாமியும் விலகவேண்டும். முதலில் அவர்கள் விலகட்டும்.” என்று கூறினார்.
இந்த வழக்கால், சித்தராமையாவின் மீதான மைசூர் நகர்ப்புற வளர்ச்சி வாரிய-முடா வழக்கு மேலும் சூடுபிடித்துள்ளது.
முன்னதாக, முடா வழக்கில் சித்தராமையா மீது வழக்குப்பதிய அம்மாநில ஆளுநர் அண்மையில் அனுமதி அளித்திருந்தார்.
ஊழல் தடுப்புச் சட்டப்படி, அமைச்சர்கள் உட்பட்ட பொது ஊழியர்கள் மீது வழக்கு பதிய அவர்களின் மேலதிகாரி அல்லது பொறுப்பாளர்கள் அனுமதி அளிக்கவேண்டும். ”தன் மீது வழக்குப் பதிய ஆளுநர் அனுமதி தந்தார். இதில் பிரதமர் மோடியும் பதவிவிலக வேண்டும்.” என்றும் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.