இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களை சேர்த்துள்ளது வங்கதேச அணி. இதன் மூலம் இந்தியா 227 ரன்கள் முன்னிலை பெற்று, இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 339 ரன்களைச் சேர்த்தது. அஸ்வின் 102 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜடேஜா 86 ரன்களில் அவுட்டாகி கிளம்பினார். அடுத்து வந்த ஆகாஷ் தீப் 17 ரன்களிலும், சிறப்பாக விளையாடிய அஸ்வின் 113 ரன்களிலும், பும்ரா 7 ரன்களிலும் விக்கெட்டாக இந்திய அணி 376 ரன்களைச் சேர்த்தது.
அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் ஓப்பனர் ஷத்மான் இஸ்லாம் 2 ரன்களில் போல்டானார். அடுத்து ஜாகிர் ஹசன் 3 ரன்களிலும், மொமினுல் ஹக் டக் அவுட்டாக திணறிக்கொண்டிருந்தது வங்கதேசம். நஜ்முல் ஹொசைன் 20 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹீம் 8 ரன்களிலும், லிட்டன் தாஸ் 22 ரன்களிலும், ஷகிப் அல் ஹசன் 32 ரன்களிலும் விக்கெட்டாக 100 ரன்களில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது வங்கதேசம்.
இருப்பினும் தொடர்ந்து ஹசன் மஹ்மூத் 9, தஸ்கின் அகமது 11, நஹித் ராணா 11 ரன்களில் அவுட்டாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களை மட்டுமே சேர்த்தது வங்கதேச அணி. இதன் மூலம் இந்திய அணி 227 ரன்கள் முன்னிலை பெற்றது. இதில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா, ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து தொடங்கிய இரண்டாவது இன்னிங்ஸில் ரோகித் சர்மா 5 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து ஜெய்ஸ்வால்10 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். விராட் கோலி 15 ரன்னில் டபிள்யூ ஆகி ரிவ்யூ எடுக்காமல் வெளியேறியனார். பின்னர் Ultraedge சோதனையில் அது அவுட் இல்லை என தெளிவாக தெரிவந்தது.
23 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 81 ரன்களை சேர்த்துள்ளது இந்திய அணி. சுப்மன் கில், ரிஷப் பண்ட் களத்தில் விளையாடி வருகின்றனர்.