“தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காவிட்டாலும், பா.ஜ.க.வுக்கு வாக்கு விகிதம் அதிகரித்திருப்பதாக” பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.பி.கள் கூட்டம் பழைய நாடாளுமன்றக் கட்டட மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சித் தலைவர்களான நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, சிராக் பஸ்வான் ஆகியோரும், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வாஸ் சர்மா உட்பட பா.ஜ.க. எம்.பி.கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நாடாளுமன்றக் குழு தலைவராக, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை இராஜ்நாத் சிங் முன்மொழிய, அமித் ஷா, நிதின் கட்கரி அதனை வழிமொழிய, ஒருமித்த குரலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “எங்கள் கூட்டணி இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிக்கிறது. 22 மாநிலங்களில் ஆட்சி அமைக்க மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். இந்திய வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கூட்டணி எங்களுடையது. அனைத்து முடிவுகளிலும் ஒருமித்த கருத்தை உருவாக்க நினைப்பதே எங்களின் முயற்சியாக இருக்கும்.” என்றவர், தமிழ்நாட்டில் பாஜக வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதைப் பேசினார்.
“வருங்காலங்களில் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. தமிழ்நாட்டிலிருந்து எம்.பி.க்கள் கிடைக்காத போதும், வாக்கு விகிதம் அதிகரித்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு வாக்கு வங்கி அதிகரித்திருப்பதே உதாரணம். தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. கேரளம் உட்பட்ட தென் மாநிலங்களிலும் பா.ஜ.க.வின் வாக்கு விகிதம் அதிகரித்திருக்கிறது.” என்றும் மோடி பேசினார்.