2022-2023 ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் பா.ஜ.க. மட்டும் 90 சதவீத அளவுக்கான நன்கொடையை பெற்றுள்ளதாக ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
2022-23ஆம் ஆண்டில் தேசிய கட்சிகள், மாநில அரசியல் கட்சிகள் வழங்கிய நன்கொடைகள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பெற்று ஏடிஆர் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய தேசிய மக்கள் கட்சிகள் 2022-2023ஆம் ஆண்டில் பெற்றுள்ள நன்கொடைகள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளன. அதன்படி, தேசிய கட்சிகள் ரூ.850.438 கோடி நன்கொடை பெற்றுள்ளன. அதில் பா.ஜ.க. மட்டும் ரூ.719.858 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அடுத்ததாக காங்கிரஸ் கட்சி ரூ.79.924 கோடி பெற்றுள்ளது.
ரூ.20ஆயிரத்துக்கு அதிகமாக எந்த நன்கொடையும் வாங்கவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
2021-22ஆம் ஆண்டில் ரூ.614.62 கோடியாக இருந்த பா.ஜ.க.வின் நன்கொடை, 2022-23ஆம் ஆண்டில் ரூ.719.85 கோடியாக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் நன்கொடை ரூ.79.92 கோடியாகக் குறைந்துவிட்டதாகத் ஏடிஆர் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
டெல்லியிலிருந்து ரூ.276.202 கோடியும், குஜராத்திலிருந்து ரூ.160.50 கோடியும், மகாராஷ்டிராவிலிருந்து ரூ.96.27 கோடியும் நன்கொடையாக தரப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த நன்கொடையில் கார்ப்பரேட் நன்கொடை மட்டும் 80.017 சதவீதம். அதில் பா.ஜ.க. மட்டும் ரூ.610.49 கோடி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.55.62 கோடி பெற்றுள்ளது.