வாக்குறுதி தந்ததைவிட மோடி செய்தது என்ன? - பா.ஜ.க. தேர்தல் அறிக்கை பற்றி கார்கே கருத்து!

கார்கே
கார்கே
Published on

வரும் மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், வெறும் வாக்குறுதிகளை அளித்ததைத் தவிர பிரதமர் மோடி வேறு என்ன செய்திருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே கேட்டுள்ளார். 

இன்று காலை தில்லியில் பா.ஜ.க. தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோரின் முன்னேற்றத்தை முக்கியமாக இலக்குவைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கை குறித்து தில்லியில் ஊடகத்தினர் சிலர் கார்கேவிடம் கேட்டதற்கு, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை நம்பகம் இல்லாதது என்றார். 

”விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக பிரதமர் கூறியிருக்கிறார். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை சட்டரீதியாகத் தருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதான் வாக்குறுதி. கடந்த பத்தாண்டுகள் ஆட்சியில் பெருமளவுக்கு மக்களுக்கு அவர் செய்தது என்ன, வாக்குறுதி அளித்ததைத் தவிர?” என்று கார்கே கேல்வி எழுப்பியுள்ளார்.

“ நாட்டில் பணவீக்கம் அதிகரித்துக்கொண்டுள்ளது. இளைஞர்கள் வேலை தேடியபடி இருக்கிறார்கள். ஆனால் பிரதமரோ பணவீக்கத்தைப் பற்றியும் வேலையின்மை பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார். எனவே, இந்தத் தேர்தல் அறிக்கையை நம்புவது சரியானது அல்ல. மக்களுக்கு அவர் எந்த நல்லதையும் செய்யப்போவதில்லை.” என்றும் கார்கே கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான மணீஷ் திவாரியோ,” தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதி கடந்த பத்தாண்டுகளில் 33 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 90 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கிராமப்புற இந்தியாவின் அவலத்தைக் காட்ட இதுவே போதுமானது. நாட்டில் மக்கள் கஷ்டத்தில் உழல்கிறார்கள் என்பதே உண்மை. பணவீக்கத்தால் கடுமையாக அல்லல்படுகிறார்கள்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com