அரியானா மாநிலத்தை ஆட்சிசெய்துவரும் பா.ஜ.க. மூன்றாவது முறையாகவும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இரவு 7.45 மணி நிலவரப்படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சியோ 37 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது.
பிஎஸ்பி, இந்திய தேசிய லோக் தளக் கூட்டணி இரண்டு இடங்களிலும் மற்ற கட்சிகள் மூன்று இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தன.
ஹாட்ரிக் வெற்றியை முன்னிட்டு பிரதமர் மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது. மொத்தமுள்ள 90 இடங்களில் இந்த அணி 49 இடங்களிலும், பா.ஜ.க. அணி 29 இடங்களிலும், மக்கள் ஜனநாயகக் கட்சி 3 இடங்களிலும், மற்றவை 9 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.
காஷ்மீர் ஆட்சியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் காங்கிரஸ், அரியானா தோல்வி குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.