உதயநிதி, கார்த்தி... இந்து மதத்தை அவமதிக்கிறது இந்தியா கூட்டணி- அமித்ஷா பரபரப்புப் பேச்சு!

மத்திய அமைச்சர் அமித்ஷா
மத்திய அமைச்சர் அமித்ஷா
Published on

காங்கிரஸ் உட்பட்ட கட்சிகளின் இந்தியா கூட்டணி, இந்து மதத்தைத் தாக்குகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் நட்டா ஆகியோர் பேசியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் இன்று நடைபெற்ற பேரணியில் அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ” கடந்த இரண்டு நாள்களாக நீங்கள் (இந்தியா கூட்டணி) இந்த நாட்டின் சனாதன தர்மத்தையும் பண்பாட்டையும் அவமதித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இந்தியா கூட்டணியின் காங்கிரஸ், திமுக கட்சிகளைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக- முன்னாள் நிதியமைச்சரின் மகன்(கார்த்தி சிதம்பரம்), ஒரு முதலமைச்சரின் மகன்(உதயநிதி ஸ்டாலின்)- சனாதன தர்மம் அழிக்கப்பட வேண்டும் என்று பேசியிருக்கிறார்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக இவர்கள் சனாதன தர்மத்தை அவமதித்துள்ளனர்.” என்று ஆவேசத்துடன் கூறினார்.

இந்தியா கூட்டணியை அராஜகக் கூட்டணி எனக் குறிப்பிட்ட அமித்ஷா, ”வாக்குகளுக்காக இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். சனாதன தர்மத்துக்கு எதிராகப் பேசியது ரொம்ப அதிகம். ஆனால் பார்க்க மட்டும் அப்படி இருப்பதில்லை. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சனாதனம் வந்துவிடுமென அவர்கள் பேசுகின்றனர். சனாதனமானது மக்களின் மனங்களில் ஆட்கொண்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின்படிதான் நாடு செயல்படும் என மோடி சொல்லியிருக்கிறார். ” என்றும் பேசினார்.

இதைப்போல, மத்தியப்பிரதேசத்தின் சித்திரக்கூட்டில் பேசிய பா.ஜ.க. தலைவர் நட்டா, ”மும்பையில் கூடிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்தியப் பண்பாட்டின் மீதும் பாரம்பர்யத்தின் மீதும் மதத்தின் மீதும் தாக்குதல் நடத்திக்கொண்டு இருக்கிறது.” என்று கூறினார்.

ஜன ஆசிர்வாத யாத்திரை எனும் பயணத்தைத் தொடங்கிவைப்பதற்கு முன்னர் பேசுகையில், ” தமிழ்நாட்டின் முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை அழிக்கவேண்டும் எனப் பேசியிருக்கிறார். மேலும், சனாதனத்தை கொரோனாவுடனும் மலேரியாவுடனும் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். சனாதனத்தை அழிப்பதற்குப் பார்க்கும் அவர்களின் கூட்டணியைத் தூக்கி எறியவேண்டும்.” என்றும் நட்டா கூறினார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற த.மு.எ.க.ச. அமைப்பின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி பேசியது மட்டுமின்றி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரமும் எக்ஸ் டுவிட்டர் தளத்தில், ”சனாதன தர்மம் என்பது சாதியாதிக்கப் படிநிலை கொண்ட சமூக அமைப்பே. சாதி என்பது இந்தியாவின் துயர்!” என்று குறிப்பிட்டிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com