திருப்பதி திருமலை தேவஸ்தானத்தால் வழங்கப்படும் லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாகப் பிரச்னை எழுந்துள்ளது. அதுவும், அதில் நெய்யுடன் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு குற்றம்சாட்டியது அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளது.
இந்த நிலையில், திருப்பதி லட்டுகளில் சோயா பீன், சோயா பீன், மீன் எண்ணெய், மாட்டிறைச்சிக் கொழுப்பு, பன்றி இறைச்சிக் கொழுப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் கலந்திருப்பதை தனியார் ஆய்வகம் ஒன்று உறுதிசெய்துள்ளது.
எண்டிடிபி காஃப் எனும் அந்த ஆய்வகம், கால்நடைகளின் ஊட்டம், பால், பால் பொருட்களை ஆய்வுசெய்வதில் பேர்பெற்றதாகும்.
திருப்பதி லட்டு செய்யப் பயன்படுத்தக்கூடிய நெய்யை இந்த ஆய்வகம் ஆய்வுசெய்ததில் இந்த முடிவு கண்டறியப்பட்டுள்ளது.
மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒய். எஸ். ஆர். சர்மிளா, சிபிஐ விசாரணையுடன் உடனடியாக உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வி.எச்.பி. அமைப்பின் தேசியப் பேச்சாளர் வினோத் பன்சால் தீவிரமாக இதை விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.