இவர் ரொம்ப வித்தியாசமான எம்.பி... நாடாளுமன்றத்துக்கு பதவியேற்க ஒட்டகத்தில் வந்தவர். நடந்து முடித்த மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சி வேட்பாளர்களை மண்ணை கவ்வ வைத்தவர். ராஜஸ்தானைச் சேர்ந்த இவரது கதையே அதிரடியாக இருக்கிறது. ஆச்சர்யமூட்டும் இன்னொரு விசயம் இவரது வயது 31 தான்!
இவர் பெயர் ராஜ்குமார் ரோத் எம்.பி. பாரத ஆதிவாசி கட்சியைச் சேர்ந்தவர்.
பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் தெற்கு ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பாரத் ஆதிவாசி கட்சியைச் சேர்ந்தவர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருப்பது, மிகப்பெரிய வெற்றியாக அப்பகுதி மக்களால் பார்க்கப்படுகிறது. ராஜ்குமார் 2,47,054 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார்.
இந்த தொகுதியில் போட்டியிட்ட முதுபெரும் பழங்குடியின தலைவரும், முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவருமான மகேந்திரஜித் சிங் மாள்வியாவைத் தோற்கடித்தவர் ராஜ்குமார்.
இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராஜ்குமார், பழங்குடியினரின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வார் என்று அம்மக்களால் நம்பப்படுகிறது. அவரும் அதையே கூறுகிறார்.
ராஜ்குமார் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, பழங்குடி மக்களின் உரிமை, கல்வி, ஊட்டச்சத்து, வன உரிமை, பழங்குடிகளின் இட ஒதுக்கீடு போன்றவற்றிற்காக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தொடர்ந்து குரல் எழுப்பியவர். இது அவரின் வெற்றிக்கு வழிவகுத்ததோடு, பாஜகவின் மீது பழங்குடி மக்களுக்கு இருந்த அதிருப்தியும் அவரின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம்.
மக்களவைத் தேர்தல்
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி அரவிந்த் என்பவரை வேட்பாளராக அறிவித்தது. பின்னர் ராஜ்குமாரை ஆதரிப்பதற்காக காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை திரும்பப்பெறும்படி கேட்டுக் கொண்டது. அவர் மறுத்துவிட்டதால் மும்முனை போட்டி நிலவியது. இதில் ராஜ்குமாரே வெற்றிப் பெற்றார்.
தேர்தலுக்கு முன்பும் பின்பும் ராஜ்குமார் காங்கிரஸ் கட்சியுடன் சுமுகமான உறவையே மேற்கொண்டு வருகிறார்.
தற்போது, எம்.பி.யாக பொறுப்பேற்றிருக்கும் அவர், தொடர்ந்து பழங்குடியினரின் நலனுக்காகப் போராடுவேன் என்கிறார். ஆந்திராவின் பழங்குடியின பகுதியில் 100 சதவீதம் இட ஒதுக்கீடு இருப்பது போன்று, மற்ற மாநிலங்களிலும் வழங்க வேண்டும் என்கிறார்.
மற்ற அரசியல்வாதிகள் போன்று தவறு செய்தவன் இல்லை என்பதால், ஒற்றை எம்.பி.யாக இருந்தாலும் தைரியமாக போராடுவேன் என்கிறார் அந்த பழங்குடியின எம்.பி.