ராட்வெய்லர் நாய் வளர்க்கத் தடை! மத்திய அரசு தடை விதிக்கும் 23 வகை நாய் இனங்கள்!

ராட்வெய்லர்
ராட்வெய்லர்
Published on

மத்திய அரசு ராட்வெய்லர், புல் டாக், பிட் புல் உள்ளிட்ட 23 வகை நாய்களை வளர்க்க தடை விதித்து ஆணை வெளியிட்டுள்ளது. இந்த நாய்கள் அனைத்தும் மிகவும் ’கோபத்துடன்’ செயல்படுபவை; அவற்றால் மனிதர்களுக்கு ஆபத்து என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 12 ஆம் தேதி அனைத்து  மாநில தலைமைச்செயலாளர்களுக்கும் இது தொடர்பாக அனுப்பிய கடிதத்தில், “ தற்போது செல்லப்பிராணிகளாக இந்த வகை நாய்கள் வளர்க்கப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து மேற்கொண்டு இவற்றின் இனப்பெருக்கம் நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்’ எனவும் கூறப்பட்டுள்ளது.

சில வகை நாய்களால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது என விலங்கு நல ஆர்வலர்கள், அமைப்புகளிடம் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வந்ததை அடுத்து இது பற்றி ஆலோசிக்க அனைத்து தரப்பினரையும் உறுப்பினர்களாகக் கொண்ட நிபுணர் குழு மத்திய கால்நடைத்துறை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்டது.

இந்தக் குழு 23 நாயினங்களை மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியவை எனக் கண்டறிந்தது. பிட்புல் டெர்ரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டபோர்ட் ஷியர்,  பிலா பிரேசிலேரோ,  டாகோ அர்ஜெண்டினோ, அமெரிக்கன் புல்டாக், கங்கல்,  மத்திய ஆசிய ஷெப்பர்டு, காகேசியன் ஷெப்பர்டு, தென் ரஷ்ய ஷெப்பர்டு, டார்ன்செக்,  சார்ப்லானியாக்,  ஜாப்பனீஸ்  டோசா, அகிடா, மாஸ்டிஃப்,  டெரியர்,  ரொடேசியன் ரிட்ஜ்பேக்,  உல்ப் டாக்,  கேனரியோ, அக்பாஷ்,  மாஸ்கோ கார்ட் டாக், பேண்டாக் உள்ளிட்ட நாய்களே அவை.

இவற்றில் பல பெயர்கள் நாம் கேள்விப்படாதவையே இருப்பினும் நாட்டின் பல பகுதிகளில் விரும்பி இறக்குமதி செய்தும் இனப்பெருக்கம் செய்து வளர்க்கப்பட்டு வருகின்றன.

இவற்றை இறக்குமதி செய்ய தடை விதிப்பதுடன் இவற்றுக்கு வளர்ப்பு உரிமம், இனப்பெருக்க உரிமம் ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகள் வழங்கக்கூடாது எனவும் அக்கடிதம் கூறுகிறது.

மத்திய கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சக இணைச்செயலாளர் ஓபி  சௌத்ரி அனுப்பி உள்ள இக்கடிதத்தில் அந்தந்த மாநில விலங்கு நல அமைப்புகளும் கால்நடைத்துறையும் இதற்குப் பொறுப்பேற்று நடைமுறைப் படுத்தவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஆபத்தான நாய்வகைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்ககூடாது என்பது பற்றிய வழக்கு ஒன்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com