ராகுல் வாகனவரிசை மீது தாக்குதல்: தமிழக காங்கிரஸ் போராட்டம்!

ராகுல் வாகனவரிசை மீது தாக்குதல்: தமிழக காங்கிரஸ் போராட்டம்!
Published on

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாகனம் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியிருப்பதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் காட்சியினர், இன்னும் சற்று நேரத்தில் ஆர்ப்பட்ட த்தில் ஈடுபட உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“பா.ஜ.க.வின் மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராக கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மதகலவரத்தால் எண்ணற்ற உயிர், உடமை இழப்புகளுக்கு ஆளான மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி 6,000 கி.மீ. தூர இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை தலைவர் ராகுல்காந்தி தொடங்கி நடத்தி வருகிறார். இதற்கு மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேச மாநில மக்களின் பேராதரவோடு அசாம் மாநிலத்தில் தற்போது பயணம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மக்களின் பேராதரவை சகித்துக் கொள்ள முடியாத, ஊழலில் ஊறித் திளைத்த அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா தூண்டுதலின் பேரில் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த வாகனங்கள் மீது பா.ஜ.க.வினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கார் தாக்கப்பட்டிருக்கிறது. இது பா.ஜ.க.வினரின் சகிப்புத்தன்மையற்ற, வன்முறை வெறியாட்டமாகவே இருப்பதை வன்மையாக கண்டிக்க விரும்புகிறோம்.

புகழ் பெற்ற சங்கர்தேவ் ஜன்மஸ்தான் கோயிலில் தலைவர் ராகுல்காந்தி இன்று வழிபடுவதற்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது. திடீரென்று நேற்று இரவு பா.ஜ.க. அரசு அனுமதியை ரத்து செய்து விட்டது. இன்று காலை கோயிலில் வழிபடுவதற்காக புறப்பட்ட தலைவர் ராகுல்காந்தியை காவல்துறையினர் தடுத்ததால் காலை 8.15 மணியிலிருந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தி வருகிறார். பா.ஜ.க. ஆட்சியில் எப்போது கோயிலுக்கு செல்லலாம், எப்போது வழிபடலாம் என்பதை அவர்களே முடிவு செய்கிற சர்வாதிகாரப் போக்கு அரங்கேறி வருகிறது. மதச்சார்பற்ற நாட்டில் தாங்கள் ஏற்றுக் கொண்ட கடவுளை வழிபடுவதற்கு பா.ஜ.க. ஆட்சியில் உரிமை மறுக்கப்படுகிறது என்பது தான் இந்த நிகழ்வின் வெளிப்பாடாகும். இத்தகைய போக்கு நீடிப்பது இந்தியாவின் பன்முக கலாச்சாரத்திற்கு எதிரானதாகும். இதை ஜனநாயக உணர்வுள்ள அனைவரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி தலைவர் ராகுல்காந்தி அவர்களை பின்தொடர்ந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க.வின் வன்முறை செயலை கண்டித்தும், தலைவர் ராகுல்காந்தி அவர்கள் வழிபடுவதற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்ததற்கு எதிராகவும் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக எனது தலைமையில் இன்று (22.1.2024) மாலை 4.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவன் முகப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் எம்.எஸ். திரவியம், சிவராஜசேகரன், எம்.பி. ரஞ்சன்குமார், ஜெ. டில்லிபாபு, எம்.ஏ. முத்தழகன், அடையாறு த. துரை ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்குமாறு அன்போடு அழைக்கிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com