ஜெய் பாலஸ்தீன் கோஷம்... காந்தியை இழுத்த ஓவைசி!

 அசாதுதீன் ஒவைசி
அசாதுதீன் ஒவைசி
Published on

ஏ.ஐ.எம்.ஐ. எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி நேற்று எம்.பி.யாக பதவியேற்றபோது ‘ஜெய் பாலஸ்தீன்’ என்று முழக்கமிட்டது சர்ச்சையான நிலையில், அவர் விளக்கம் அளித்துள்ளார்.

18ஆவது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி-க்களாக வெற்றி பெற்றவர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், ஹைதராபாத் தொகுதியில் வெற்றிபெற்ற ஏ.ஐ.எம்.ஐ. எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி மற்ற எம்.பி-க்களைப் போலவே முறைப்படி சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்க அழைக்கப்பட்டார். அப்போது, ஒவைசி மேடைக்கு நடந்துசெல்லும்போது அவையிலிருந்த பா.ஜ.க எம்.பி-க்கள் சிலர், பாரத் மாதா கி ஜே, ஜெய் ஸ்ரீராம் என்று சத்தம் போட்டனர்.

அதையடுத்து, சபாநாயகர் முன்னிலையில் உருது மொழியில் எம்.பி-யாக பதவியேற்றுக்கொண்ட ஒவைசி, `ஜெய் பீம், ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீன், தக்பீர் அல்லாஹு அக்பர்' என்று கூறிவிட்டு கீழிறங்கினார்.

இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

“இது அவையின் விதிகளுக்கு எதிரானது. இந்தியாவில் வாழும் அவர் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கூறாதபோதே, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான வேலைகளை அவர் செய்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார்.

தான் அவ்வாறு பேசியது குறித்து விளக்கமளித்த ஒவைசி, “மற்ற எம்.பி-க்களும் பல்வேறு விஷயங்களைச் சொல்கிறார்கள். நான், ஜெய் பீம், ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீன் என்றுதான் கூறினேன். இது எப்படி தவறாகும்... இதில் அரசியலமைப்பு விதியை எங்கு மீறினேன். பாலஸ்தீனம் பற்றி மகாத்மா காந்தி கூறியதையும் படியுங்கள்" என்று கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com