திகார் சிறையில் சரணடைந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்!

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

உச்சநீதிமன்றம் அளித்த இடைக்கால ஜாமின் முடிவடைந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திகார் சிறையில் சரணடைந்தார்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையிலடைக்கப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்கால ஜாமினில் வெளிவந்தார்.

21 நாள்கள் இடைக்கால ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த அடுத்தநாள் சிறையில் சரணடைய வேண்டும் என்று கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டது.

ஜாமினில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதைத் தொடர்ந்து, கடந்த வார இறுதியில் தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி, இடைக்கால ஜாமினை நீட்டிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்தார். இருப்பினும், உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலின் மனுவைத் தள்ளுபடி செய்து ஏற்கெனவே குறிப்பிட்ட ஜூன் 2ஆம் தேதி சிறையில் சரணடையுமாறு உத்தரவிட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்றோடு முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று சிறையில் சரணடைய அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள தனது வீட்டிலிருந்து மதியம் 3 மணியளவில் கிளம்பினார்.

முதலில் டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கன்னட் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு சென்றார்.

அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால், "நான் ஊழல் செய்ததால் மீண்டும் சிறைக்கு செல்லவில்லை, சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பியதால் சிறைக்கு செல்கிறேன்.

உச்சநீதிமன்றம் எனக்கு 21 நாட்கள் பிணை வழங்கியது. இந்த 21 நாட்களும் என் வாழ்நாளில் மறக்கமுடியாது. இந்த நேரத்தில் ஒரு நிமிடம் கூட நான் வீணடிக்கவில்லை.

இந்தியாவை பாதுகாப்பதற்காக நான் பிரச்சாரம் செய்தேன். ஆம் ஆத்மி கட்சியை விட இந்த நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கியமானது.

ஜூன் 4-ஆம் தேதி நிச்சயமாக பாஜக ஆட்சியமைக்க மாட்டார்கள். நேற்று வெளியாகியிருக்கக்கூடிய எக்சிட் போல் முடிவுகள் என்பது உங்களை உளவியல் நெருக்கடியில் ஆழ்த்தும் மைண்ட் கேம்" என்றார்.

பின்னர் ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து தனது மனைவி சுனிதா, மகள் ஹர்ஷிதா ஆகியோருடன் திகார் சிறை நோக்கி கெஜ்ரிவால் தனது காரில் கிளம்பினார். பின்னர் திகார் சிறையில் கெஜ்ரிவால் சரணடைந்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com