விடாது கருப்பு... எருமை திருடிய வழக்கில் 60 ஆண்டுகள் கழித்து கைது!

விடாது கருப்பு... எருமை திருடிய வழக்கில் 60 ஆண்டுகள் கழித்து கைது!
Published on

இரண்டு எருமைகள், ஒரு கன்றுக்குட்டி. இவற்றைத் திருடிய குற்றத்துக்காக 78 வயதான தாத்தாவான கணபதி வித்தல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுல என்னய்யா விசேஷம் என்கிறீர்களா?

தாத்தா செய்த குற்றம் இப்போது செய்தது இல்லை. 1965 ஆம் ஆண்டு தன் 20 வயதில் செய்த திருட்டுக்குத்தான் இப்போது கைது ஆகி உள்ளார்.

கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் காவல்நிலையங்களில் இருக்கும் பழைய கேஸ்களை தூசு தட்டி குற்றவாளிகளைத் தேடி வருகிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த வழக்கும். கணபதி வித்தல் பக்கத்து மாநிலமான மகாராஷ்ட்டிரத்தைச் சேர்ந்தவர். இங்கே திருடிவிட்டு சொந்த மாநிலத்துக்கு ஓடி அறுபது ஆண்டுகளாக வாழ்க்கையை சந்தோஷமாக முடித்தவரை இப்போது பிடித்துள்ளனர்.

ஏற்கெனவே இந்த திருட்டில் இவர் கைதானவர்தான். அப்போது பிணையில் வந்தவர் தலைமறைவு ஆகிவிட்டாராம். அதில்தான் இப்போது கைது செய்துள்ளனர்.

இந்த திருட்டில் எருமைகளையும் கன்றையும் அப்போதே மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விட்டது போலீஸ். இந்த திருட்டில் கணபதி வித்தலுக்கு ஒரு பைசா கூடத் தேரவில்லை.

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் கழித்து ஒரு குற்றத்தில் சம்பந்தப்பட்டவர் கைதாகி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com