ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் ஓய்வு குறித்துப் பேசிய அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வுக்கு மறைமுகமாக அறிவுரை வழங்குகிறாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒடிசாவில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “77 வயதாகும் நவீன் பட்நாயக், வயது முதிர்வு, உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வுபெற வேண்டும். பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் ஒடியா மண்ணின் மைந்தரை முதல்வராக்குவோம்.” என்று பேசியிருந்தார்.
அமித் ஷாவின் இந்தக் கருத்துக்குப் பதிலடியாக ப. சிதம்பரம் தன் எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
“வயது முதிர்வின்(வயது 77) காரணமாக நவீன் பட்நாயக் ஓய்வுபெற வேண்டும் என்று அமித் ஷா கூறியுள்ளார். ஒருவேளை பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் மோடி (73 வயது 7 மாதங்கள்) ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்கான சமிக்ஞையா? பா.ஜ.க. ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித் ஷா மகிழ்ச்சியாக இருப்பார் எனத் தெரிகிறது. அவர் எதிர்க்கட்சித் தலைவராவார்.” என்று சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.