அம்பானி இல்ல திருமணம்! பட்ஜெட்டை கேட்டா தலை சுத்துது!

ஆனந்த் - ராதிகா தம்பதி
ஆனந்த் - ராதிகா தம்பதி
Published on

ஆனந்த் அம்பானி, ஆசியாவின் பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானியின் இளையமகன். அவருக்கும் பிரபல மருந்தக தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த ராதிகா மெர்ச்சண்ட் இடையிலான திருமணம் படு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது.

உலகம் முழுவதுமிருந்து பிரபலங்களும் இந்தி, தமிழ் திரை நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களுமாக மிக பிரமாண்டம்.

அமிதாப், சாருக்கான், சல்மான் உள்ளிட்ட அனைத்து பாலிவுட் பிரபலங்களும் ரஜினிகாந்த், ராம் சரண், மகேஷ்பாபு ஆகிய தென்னிந்திய பிரபலங்களும் ஆஜர் ஆயினர். சச்சின், தோனி போன்ற கிரிக்கெட் நட்சத்திரங்களும் இதைத் தவறவிடவில்லை. திருமணத்துக்கு இந்திய பாரம்பரிய உடை என்கிற டிரெஸ் கோடை எல்லாரும் கடைபிடித்தது கவனம் ஈர்த்தது.

திருமணம் மும்பையில் உள்ள அம்பானி குடும்ப விழா மண்டபத்தில் நடந்தது. தங்கள் பிரமாண்ட இல்லமான அண்டிலாவில் இருந்து ஆரஞ்சு ஷ்ர்வானி அணிந்த மணமகன் காரில் ஊர்வலமாக சென்றார். பாரத் ஊர்வலத்தில் ரன்வீர் சிங், அனில் கபூர் ஆகியோர் ஆடியபோது அவர்களுடன் நடிகர் ரஜினிகாந்தும்  ஆடினார். ஹாலிவுட்  நடிகர் ஜான் சீனா கூட ஆட்டம் போட்டார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் இத்திருமண ஏற்பாடுகள் தொடங்கின. ஜாம் நகரில் ஒரு பெரிய விருந்து நிகழ்ச்சி 1200 விருந்தினர்களுடன் நடந்தது. பில் கேட்ஸ், மார்க் சக்கர்பக் போன்றோர் அதில் கலந்துகொண்டனர்.

இதை அடுத்து மே மாதன் ஐரோப்பாவில் குறிப்பிட்ட விருந்தினர்களுடன் கப்பலில் ஒரு விருந்துவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த வாரம் சங்கீத் நிகழ்ச்சி. ஜஸ்டின் பீபர் வந்து இசை நிகழ்ச்சி செய்தார்.

மகளுடன் மணவிழாவுக்கு வந்த ஐஸ்வர்யா ராய்
மகளுடன் மணவிழாவுக்கு வந்த ஐஸ்வர்யா ராய்ASOKAN
மணவிழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்
மணவிழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்

திருமணமே மூன்றுநாள் நிகழ்வாக நடக்கிறது. ஒவ்வொரு திருமண அழைப்பிதழும் ஐந்து லட்சம் மதிப்பில் வடிவமைக்கப்பட்டன என்கிறார்கள். அழகான பெட்டிக்குள் வெள்ளி கோவில் வைத்த அழைப்பிதழ் அது.

மூன்று பால்கன்2000 ஜெட் விமானங்கள் விருந்தினர் வருகைக்காக வாடகைக்கு எடுக்கப்பட்டன. ரிஹானாவின் இசை நிகழ்ச்சிக்கு  58 கோடியும் ஜஸ்டின் பீபர் நிகழ்ச்சிக்கு 83 கோடியும் செலவானதாக சொல்லப்படுகிறது.

அம்பானி குடும்பம்
அம்பானி குடும்பம்

இன்று நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார்.

தங்கள் பிற குழந்தைகள் திருமணத்துக்கும் முகேஷ் அம்பானி இப்படித்தான் பணத்தை செலவழிக்கத் தயங்கவே இல்லை. உலகின் 11-வது பெரிய பணக்காரர் அல்லவா?

அம்பானி குடும்பத்தின் இந்த திருமணத்துக்காக ஆரம்பத்திலிருந்து கடைசி வரை 320 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழிக்கப்டுவதாக டெய்லி மெயில் பத்திரிகை கூறி உள்ளது. இதை இந்திய ரூபாயில் மாற்றினால் 26,72,61,92,000.00 ரூபாய் என வருகிறது. இந்த நம்பரை எப்படீங்க படிக்கிறது…. தலை சுத்திடுச்சே….

logo
Andhimazhai
www.andhimazhai.com