பஞ்சாபில் ஆம் ஆத்மி, மேற்குவங்கத்தில் திரிணாமுல் தனித்துப் போட்டி!

பஞ்சாபில் ஆம் ஆத்மி, மேற்குவங்கத்தில் திரிணாமுல் தனித்துப் போட்டி!
Published on

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் தேர்தலைச் சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.

இந்த நிலையில், பஞ்சாப்பில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பகவத்மான் அறிவித்துள்ளார்.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் தொகுதிப் பங்கீடு செய்வதில் காங்கிரஸ் கட்சி பிடிவாதமாக உள்ளது எனவும் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி நீடிக்கிறது எனவும் முதலமைச்சர் பகவத்மான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று காலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும் அறிவித்தார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், “மேற்கு வங்காளத்தில் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம் என ஏற்கனவே தெரிவித்துள்ளேன். தேசிய அளவில் நடப்பது குறித்து எங்களுக்கு கவலையில்லை. ஆனால், நாங்கள் மதச்சார்பற்ற கட்சி. மேற்கு வங்காளத்தில் தனித்து நின்று பா.ஜ.க.வைத் தோற்கடிப்போம். இந்தியா கூட்டணியில் ஓர் அங்கமாக உள்ளோம். மேற்கு வங்காளத்தில் ராகுல் காந்தி நடைபயணம் செல்ல இருக்கிறார். ஆனால், எங்களுக்கு அதுபற்றி தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.” என்றார்.

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. ஆம் ஆத்மியுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்துவந்தது; திரிணாமுல் கட்சியுடன் பேச்சுவார்த்தையே தொடங்கவில்லை எனும் நிலையில், இரு கட்சிகளின் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com