கல்வி கற்க வயது தடை இல்லை என்பதற்கு இந்த 78 வயது முதியவர் ஒரு உதாரணம். ஆங்கிலத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய, ஆங்கில நாளேடுகளைப் படிக்க, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆங்கில செய்தியை புரிந்துகொள்ள பள்ளியின் படியை தினந்தோறும் ஏறி இறங்குகிறார் மிசோரோமை சேர்ந்த அந்த முதியவர்.
மிசோரம் மாநிலம் சம்பாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லால்ரிங்தாரா. வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் 2ஆம் வகுப்பு வரை பயின்றிருக்கிறார். தொடர்ந்து கல்வி கற்பதற்கான சூழல் இல்லாதபோதும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கல்வி கற்பதைத் தொடர்ந்துள்ளார். 1995ஆம் ஆண்டு மீண்டும் பள்ளியில் சேர்ந்து படித்துள்ளார். வெற்றிகரமாக 8 ஆம் வகுப்பை முடித்துள்ளார்.
78 வயதான இவர், தற்போது 9ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளார். ஏப்ரல் மாதம் நடைபெற்ற சேர்க்கையின்போது, தான் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்து பள்ளியில் சேர்ந்துள்ளார். மிசோரம் - மியான்மர் எல்லையைக் கடந்து 3 மணிநேரம் பயணித்து பள்ளிக்கு வந்து செல்கிறார்.
அவருக்கு பள்ளி நிர்வாகம் சீருடை மற்றும் புத்தகங்களை வழங்கியுள்ளது. சக மாணவர்களுடன் அமர்ந்து முதியவரும் கல்வி கற்கும் புகைப்படங்களை இணையத்தில் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.