உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தை அச்சுறுத்தி வந்த மேலும் ஒரு ஓநாயை வனத்துறையினர் இன்று பிடித்துள்ளனர். இதுவரை மொத்தம் 5 ஓநாய்கள் பிடிபட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய்கள் கடித்து இதுவரை குழந்தைகள், பெண்கள் என 9 பேர் இறந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் வரவே பயப்பட்டனர்.
இதனால், பதுங்கியிருந்த ஓநாய் கூட்டத்தைப் பிடிக்க வனத்துறையினர் ஒன்பது குழுக்களை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஓநாய்கள் இருக்கும் பகுதிகளில் நான்கு கூண்டுகள், ஆறு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் ஓநாய்களைத் தேடும் பணியில் வனத்துறையினர் தெர்மல் ட்ரோன்களை பயன்படுத்தி வந்த நிலையில், நேற்றுவரை 4 ஓநாய்கள் பிடிபட்டிருந்தன.
இந்த நிலையில், இன்று மேலும் ஒரு ஓநாய் பிடிபட்டுள்ளது. இது பெண் ஓநாய் ஆகும். எஞ்சியுள்ள ஓர் ஆண் ஓநாயை விரைவில் பிடிப்போ என வனகோட்ட அலுவலர் அஜீத் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்றரை மாதத்துக்கு மேலாக கடும் அச்சத்திலிருந்து வந்த சுமார் 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இப்போதுதான் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கியுள்ளனர்.