சத்தீஸ்கரில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சோட்டபெத்தியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பினகுண்டா, கொரோனார் கிராமங்களுக்கு இடையே ஹபடோலா வனப்பகுதியில் நேற்று மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ படையினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் கூட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவர்களுக்கும் மாவோயிஸ்ட் ஆயுதக்குழு இயக்கத்தினருக்கும் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதில், மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில், தேடப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத் தலைவரான சங்கர் ராவ், லலிதா, இராஜூ ஆகியோரும் அடங்குவர் என்று சத்தீஸ்கர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சங்கரைப் பிடித்துக்கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மூன்று பேர் காயமடைந்திருப்பதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து துப்பாக்கி உட்பட்ட ஆயுதங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.