நரேந்திர தபோல்கர்
நரேந்திர தபோல்கர்

தபோல்கர் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள்… 3 பேர் விடுவிப்பு!

நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புனே நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற 3 பேரை நீதிமன்றம் விடுவித்தது.

சமூக செயற்பாட்டாளரும், மகாராஷ்டிரா அந்தாஷ்ரதா நிர்மூலன் சமிதியின் தலைவருமானவர் நரேந்திர தபோல்கர் கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று புனேவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தபோல்கர் கொலை வழக்கை முதலில் புனே போலீஸார் விசாரித்தனர். பின்னர் பம்பாய் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, 2014இல் சிபிஐ விசாரணையை மேற்கொண்டது.

இந்த வழக்கில் வீரேந்திரசிங் தவாடேவை கடந்த 2016 ஜூன் மாதம் சிபிஐ கைது செய்தது. மேலும், சச்சின் அன்டுரே, ஷரத் கலாஸ்கர் ஆகியோர் தபோல்கரை சுட்டுக் கொன்றதாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில், தபோல்கர் கொலை வழக்கில் புனேவில் உள்ள சிறப்பு நீதிமன்ற கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பிபி ஜாதவ் இன்று அளித்த தீர்ப்பில், ”சச்சின் அன்டுரே, ஷரத் கலாஸ்கர் மீதான கொலை, சதி குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது.

எனவே, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது” என தெரிவித்தார். மேலும், வீரேந்திரசிங் தவாடே, சஞ்சீவ் புனாலேகர், விக்ரம் பாவே ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com