107 பேர் பரிதாப சாவு- உ.பி. கோரத்துக்குக் காரணம்?

உ.பி. ஹத்ராசில் கோரத்துக்கு முன்னர் சொற்பொழிவு ஆற்றிய சாமியார்
உ.பி. ஹத்ராசில் கோரத்துக்கு முன்னர் சொற்பொழிவு ஆற்றிய சாமியார்
Published on

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 107 பேர் உயிரிழந்த கோரம் அரங்கேறியுள்ளது.

உ.பி.யின் ஹத்ராசில் இன்று சத்சங் எனும் ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது கால்வாயை ஒட்டிக் கட்டப்பட்ட உயரமான சாலையில் திடீரென சலசலப்பு ஏற்பட்டது. முண்டியடித்தபடி கூட்டம் நகர, ஒருவர்பின் ஒருவராக கால்வாய்க்குள் விழுந்தார்கள்.

உடனே அந்த இடமே அமளிதுமளியாக என்ன நடக்கிறதென்றே தெரியாத நிலை ஏற்பட்டது.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்களை ஹத்ராஸ், பக்கத்து மாவட்டமான ஈட்டா ஆகியவற்றில் உள்ள மருத்துவமனைகளுக்கு எடுத்துச்சென்றனர்.

மொத்தம் 107 பேர் இறந்துபோனதாகவும் அவர்களில் ஈட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 27 பேர் என்றும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் அலிகார் ஆணையர் வி. சைத்ரா ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.

சகர் விஷ்வ ஹரி என்கிற சாமியாரின் சொற்பொழிவை மணவ் மங்கள் மிலன் சத்பவன சமகம் கமிட்டி எனும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத்தலைவர் முர்மு சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசுகையில் இச்செய்தியை அறிவித்த பிரதமர் மோடி தன் இரங்கலைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com