அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி உள்ளார்?; மருத்துவர்கள் விளக்கம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி உள்ளார்?; மருத்துவர்கள் விளக்கம்!
Published on

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கு ஆஞ்சியோ கிராம் எடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு இதயத்தில் 3 முக்கிய குழாய்களில் அடைப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. அவருக்கு உடனடியாக பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் 5 மணி நேரமாக அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருடைய இதயத்தில் இருந்த அடைப்புகள் எடுக்கப்பட்டதாகவும் அங்கு ஒரு ஸ்டென்ட் கருவி வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி இருக்கிறார் என்பதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று அறுவை சிகிச்சை நடந்த நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை காவேரி மருத்துவமனையில் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் உள்ளார். 24 மணி நேரத்திற்கு பின் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு, இயற்கையாக சுவாசிக்கத் தொடங்குவார். தற்போது மயக்க மருந்து முழுவதும் செயலிழந்து அவருக்கு வலி நிவாரணிகள் கொடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்து ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இருதரப்பிலும் வாதங்கள் காரசாரமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com